சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம்; மழைநீர் வெளியேறும் வழிகள் அடைப்பால் ஏற்பட்டது: சென்னை ஐஐடி பேராசிரியர் தகவல் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை:மழைநீர் வெளியேறும் வழிகள் அடைக்கப்பட்டதால் சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ளம் ஏற்பட்டது என்று சென்னை ஐஐடி பேராசிரியர் பாலாஜி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

உலக வானிலை தினத்தையொட்டி, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில், ‘பேரிடர் அபாய குறைப்புக்கான நீர் சார்ந்த வானிலையியல், காலநிலை தகவல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்’ என்றதலைப்பில் கருத்தரங்கம் சென்னைநுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் இந்திய வானிலை ஆய்வுமையத்தின் புனே மண்டல விஞ்ஞானி பி.குஹாதகுர்தா பங்கேற்று, ‘பேரிடர் அபாயங்கள் தணிப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவர் பேசும்போது, “அண்மைக் காலமாக மழை பெய்யும் நாட்கள் குறைந்து வருகின்றன. குறைந்த காலத்தில் அதிக மழை பெய்கிறது. அவ்வளவு மழைநீரை மண்ணால் வேகமாக கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் வெள்ளம் ஏற்படுகிறது. கிடைத்த மழைநீர் நிலத்தடி நீராக மாறாததால், அடுத்து வரும் ஆண்டுகளில் நாம் வறட்சியை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது” என்றார்.

பின்னர், சென்னை ஐஐடி சிவில் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், காலநிலை ஆபத்துகள் மற்றும் பாதிப்புகள் குறித்த இந்திய அளவிலான வானிலை வரைபடத் தொகுப்பை இணையவழியில் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து தமிழக அளவிலான வரைபடத் தொகுப்பை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

2015-ம் ஆண்டு வெள்ளத்துக்கு முன்பு ஒரு மணி நேரத்துக்கு 31 மிமீ அளவு மழையை தாங்கும் வகையில் மழைநீர் வடிகால்களை மாநகராட்சி அமைத்தது. 2015-ம் ஆண்டு வெள்ளத்துக்கு பிறகு, ஒரு மணி நேரத்தில் 68 மிமீ மழையைத் தாங்கும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன. இப்போது அதை விட அதிக மழை பெய்தாலும் வெளியேறும் வகையில் மழைநீர் வடிகால்களை அமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

சென்னை மாநகரப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்துக்கும் குறைவாக அமைந்துள்ளது. அதனால் அதிகப்படியான மழை பெய்யும்போது வெள்ளம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் மழைநீர் தேங்கும் நாட்களைக் குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கலாம். எவ்வளவு மழை பெய்தால், எந்தெந்தப் பகுதிகளில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்த தரவுகளைச் சேகரித்து, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். வீடுகளைக் கட்டும்போது, தரை தளத்தை தூண்களாக நிறுவி முதல் தளத்தில் இருந்து குடியிருப்பு வீடுகளைக் கட்டுதல் போன்ற மாற்றங்களைச் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/780854-last-year-s-floods-in-chennai.html