மேயர் பிரியா ராஜன் அதிரடி; கலக்கத்தில் சென்னை மக்கள்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்
சென்னை மேயர் பிரியா ராஜன் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு சென்னை மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை மேயராக பிரியா ராஜன் தேர்வு

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த மார்ச் 4ம் தேதி சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றதற்கு பிறகு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் தலைகாட்டும் பிரியா ராஜன் எப்போதுமே சுறுசுறுப்பாக வலம் வருகிறார்.

​பள்ளி மாணவர்கள் மீது அக்கறை

அந்தவகையில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு கடந்த 14ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர் நகர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் நடந்து வருகிற மழைநீர் வடிகால் பணிகளுக்கான ஒப்பந்த ஆணைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 15ம் தேதி நடைபெற்றது.

ஒப்பந்ததாரர்களுக்கு பரபரப்பு உத்தரவு

இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தாரர்களிடம் ஆணைகளை வழங்கிய மேயர் பிரியா ராஜன் பணியை உடனடியாக தொடங்கி பருவ மழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இவ்வாறாக, இளம் வயது என்ற போதிலும் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் துணிச்சலுடன் பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். மேயரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விதி மீறும் கட்டிடங்களுக்கு சீல்

இந்நிலையில் இன்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: சென்னை மாநகராட்சி வழங்கிய கட்டட அனுமதியின் அடிப்படையில் மட்டுமே கட்டடம் கட்டப்பட வேண்டும். விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

​கட்டடம் குறித்த விவரங்கள் சேகரிப்பு

எனவே திட்ட அனுமதியில் குறிப்பிட்டு உள்ளவாறு அளவு, விவரக் குறிப்பின் அடிப்படையில் மட்டுமே இனி கட்டடங்களை கட்ட வேண்டும். மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறிய கட்டடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இனியும் இதுபோன்று விதி மீறி கட்டிடங்கள் கட்டப்படுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கட்டிடங்களுக்கும் அதிரடியாக சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சென்னை மேயர் பிரியா ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலக்கத்தில் சென்னை மக்கள்

சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்ற ஒரு சில வாரங்களிலேயே பிரியா ராஜன் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தற்போது மேயர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் மேயர் பிரியா ராஜனின் இந்த உத்தரவால் சென்னையில் இனி கட்டிடங்கள் கட்டுவதில் சிக்கல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் சொந்த இடம் வைத்துள்ளவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-mayor-priya-rajan-has-warned-that-building-will-be-sealed-if-it-is-built-illegally/articleshow/90442283.cms