`விதிகளை மீறிய 99 கட்டடங்களுக்கு நோட்டீஸ்; 11 கட்டடங்களுக்குச் சீல்’ – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் குடியிருப்பு கட்டடங்களின் திட்ட அனுமதியும், கட்டட அனுமதியும் சென்னை மாநகராட்சியின் நகரமைப்பு துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. 5,000 சதுர அடிக்குக் குறைவான கட்டடங்களுக்கான அனுமதி அந்தந்த மண்டலங்களிலும், அதற்கு மேற்பட்ட அளவுடைய கட்டடங்களுக்கான அனுமதி ரிப்பன் கட்டடத்தில் உள்ள நகரமைப்பு பிரிவு மூலமாகவும் வழங்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி- ரிப்பன் பில்டிங்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் கட்டடங்களைக் கட்டுபவர்கள், திட்ட மற்றும் கட்டட அனுமதி பெறுபவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவில் தான் கட்டடங்களைக் கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டால், கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.

அந்த வகையில், விதிமுறைகளை மீறியும், போதிய ஆவணங்கள் இல்லாமலும் கட்டப்பட்ட கட்டடங்கள், நோட்டீஸ் வழங்கப்பட்டு மூடி சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதற்கட்ட நடவடிக்கையாக ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள 125 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு இடத்தை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, 99 கட்டடங்களைப் பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 11 கட்டடங்களைப் பூட்டி சீல் வைத்துள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள். அந்தந்த மண்டல அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விதிமீறல் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.vikatan.com/government-and-politics/politics/chennai-corporation-warns-severe-action-will-be-taken-on-construction-rule-breaches