சென்னையில் பைனான்சியர் கொலை: இருவர் சரண்; சிசிடிவி காட்சிகள் வெளியானது – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை அமைந்தகரை பைனான்சியர் ஒருவரை நேற்று பட்டப்பகலில் நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

சென்னை சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(36). இவர் செனாய் நகரில் ஏவி பைனான்ஸ் நிறுவனம் பெயரில் பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார். 

இவர், செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் அண்ணாநகர் பகுதியான அமைந்தகரை, புல்லா அவென்யூ, அமரா ஸ்டோர் எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது, பின் தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென ஆயுதங்களால் பட்டப்பகலில் ஆறுமுகத்தின் தலை மற்றும் கையில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். 

ஆனால், காரில் வந்த ஒரு சமூக ஆர்வலர் சாலையில் ரத்த வெள்ளத்தில் இருந்த நபரை விடியோவாக எடுத்து வாட்ஸ்அப் குழுவில் அனுப்பிவைத்தார். இதனால் அந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆறு தனிப்படைகள் அமைத்து  விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் கும்பலில் சந்திரசேகரன் என்கிற உஷ் மற்றும் ரோகித் என்கிற ரோகித் ராஜ் ஆகிய 2 பேர் மட்டும் கள்ளக்குறிச்சி பாஸ்ட்ராக் நீதிமன்றத்தில் நேற்று மதியம் சரணடைந்துள்ளதாக சென்னை அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனிடையே, இருசக்கர வாகனங்களின் எண்ணை வைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் விவரங்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவரின் விவரங்களையும் கண்டுபிடித்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், கொலைக்கான காரணங்கள் தெரியாமல் போலீசார் திகைத்து வந்த நிலையில், அமைந்தகரை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட விடியோ பதிவு காட்சிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிக்க | வரம்பு மீறல்! | அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு குறித்த தலையங்கம்

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/may/20/financier-murdered-in-chennai-two-surrender-cctv-footage-was-released-3847818.html