சென்னை சாலையோர பகுதிகளில் 1,087 ஆக்கிரமிப்புகள் அகற்றம் | 1087 encroachments will be removed from roadsides in Chennai – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 1,087 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்குட்பட்ட மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளை அகற்றுதல், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டல பறக்கும் படைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் முக்கிய சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் மழைநீர் வடிகால் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்பை ஏற்படுத்தியுள்ள நபர்கள் ஆகியோர் மீது அபராதமும் இக்குழுவால் விதிக்கப்பட்டு வருகிறது.

இக்குழுவினரால் 3-ம் தேதிவரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 15 மண்டலங்களில் 113 நிரந்தர கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள் மற்றும் 974 தற்காலிக கூடாரங்கள் போன்ற ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 1,087 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, 902 மெட்ரிக் டன் அளவிலான கட்டிடக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் வடிகால்களிலிருந்து 487 கழிவுநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில் மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட மண்டல பறக்கும் படைக்குழுவினரால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/835415-1087-encroachments-will-be-removed-from-roadsides-in-chennai.html