சென்னை மாணவ பத்திரிக்கையாளரிடம் அத்துமீறிய ஆட்டோ டிரைவர்: ட்விட்டரில் ஷாக் பதிவு – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Chennai Tamil News: கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் இளம் பெண் ஒருவரிடம் ஆட்டோ டிரைவர் அத்துமீறியதால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் சரி உலகளாவிய நாடுகளிலும் சரி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் பாலியல் குற்றங்கள் சமீபத்தில் மிகவும் அதிகமாக நடந்து வருகிறது. 

இரவு ஆனாலும் சரி பகல் ஆனாலும் சரி, வெளியே செல்லும் பெண்களின் பாதுகாப்பு முற்றிலும் இல்லாமல் அபாயகரமான சூழ்நிலையே நிலவுகிறது.

இந்நிலையில், சென்னையில் இளம் பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் தாக்குதலை குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பெண், “நானும் எனது நண்பரும் ​​ஐ.பி.ஸ்., ஓ.எம்.ஆரில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு திரும்பிய போது செல்வம் என்ற ஆட்டோ டிரைவர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். 

எனது நண்பர் ஆட்டோவில் இருந்து இறங்கி பணம் செலுத்தும்போது, அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அப்போது நான் கத்தினேன். மேலும், அந்த ஆட்டோ டிரைவரை தடுத்து நிறுத்தவும் நாங்கள் முயன்றோம், ஆனால் முடியவில்லை. நான் உடனடியாக போலீசாருக்கு கால் செய்த போதிலும் எந்த பதிலும் இல்லை”, என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அச்சம்பவம் நடந்து 30 நிமிடங்களுக்குப் பின்னர், இன்ஸ்பெக்டர் ஒருவர் ஹோட்டலுக்கு விசாரணை நடத்த வந்தார். ஸ்டேஷனில் பெண் அதிகாரி யாரும் இல்லை என்பதால், எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யக் காலை வரை காத்திருக்க வேண்டும் எனச் சொன்னார். 

இருப்பினும், இரு ஹோட்டல் ஊழியர்களுடன் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்குச் சென்றோம். இரவு நேரத்தில் பெண்களை ஸ்டேஷனில் அனுமதிக்க மாட்டோம் என்றே அங்கு இருந்த ஸ்டேஷன் இன்சார்ஜும் தெரிவித்தார். இதன் காரணமாக நான் ஸ்டேஷனுக்கு வெளியே இருந்தபடியே புகார் அளிக்க வேண்டியிருந்தது.

இதன்பிறகு, அடுத்தநாள் காலை 9 மணிக்கு லேடி போலீஸ் அதிகாரி வந்த பின்னர் ஸ்டேஷனுக்கு வரவழைத்தார்கள். அப்போதும் எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை. அதனால் நான் ஆன்லைனில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளேன். அந்த ஆட்டோ டிரைவர் ஐபிசி 354 மற்றும் 506 பிரிவுகளில் தண்டிக்கப்பட வேண்டும். எனக்கு நேர்ந்தது மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது. என்னாலும் எனது நண்பராலும் இன்னும் அதில் இருந்து மீண்டு வர முடியவில்லை.

நான் அவரைப் பார்த்துக் கத்தும்பொழுது அவனுக்கு ‘சிரிக்கும்’ துணிச்சல் இருந்தது. அவருடைய முகத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது” என்று பதிவிட்டு ஆட்டோ ஓட்டுநர் குறித்த தகவல்களையும் டிரிப் தகவல்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், சம்மந்தப்பட்ட அந்த ஆட்டோ டிரைவரை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட ஆட்டோ டிரைவரை தேடி வருவதாக போலீசார் தகவல் வெளியிட்டனர். இதை தொடர்ந்து, நேற்று இரவு இக்குற்றச் செயலை புரிந்த ஆட்டோ டிரைவரை காவல் துறையினர் கைதி செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/auto-driver-who-violated-chennai-student-journalist-517169/