சென்னையில் ரூ.45.19 கோடியில் 5 வகையான 379 சாலைகள் சீரமைப்பு – முழு விவரம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் ரூ.45.19 கோடி செலவில் 379 சாலைகள் விரைவில் சீரமைக்கப்படவுள்ளன. சென்னை மாநகராட்சியால் 387 கிமீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பருவமழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளில் ஜல்லிக் கலவை (Wet Mix Macadam), தார்க்கலவை (Hot Mix) மற்றும் குளிர் தார்க்கலவை (Cold Mix) கொண்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பருவமழை முடிவடைந்தவுடன் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீர்செய்யப்படவுள்ளன.

இதன்படி சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ரூ.45.19 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள், 34 பேருந்து தார் சாலைகள், 63 உட்புற சிமென்ட் கான்கிரீட் சாலைகள், 2 சிமென்ட் கான்கிரீட் பேருந்து சாலைகள், 47 இன்டர்லாக் பேவர் பிளாக் சாலைகள் என 379 சாலைகளை மேம்படுத்தப்படவுள்ளன.

உட்புற தார் சாலைகள்: திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ரூ.19.51 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள் மேம்படுத்த 20 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

பேருந்து தார் சாலைகள்: மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் ரூ.17.35 கோடி மதிப்பீட்டில் 34 பேருந்து சாலைகளை தார் சாலைகளாக அமைக்க 13 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

உட்புற சிமென்ட் கான்கிரீட் சாலைகள்: திருவொற்றியூர், மணலி, இராயபுரம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் 63 உட்புறச் சாலைகள் சிமென்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 4 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

பேருந்து சிமென்ட் கான்கிரீட் சாலைகள்: தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் 2 பேருந்து சாலைகள் சிமென்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 2 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

இன்டர்லாக் பேவர் பிளாக் சாலைகள்: மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் 47 சாலைகள் பேவர் பிளாக்குகளை கொண்டு அமைக்கப்பட உள்ளன. இந்தப் பணிக்காக 4 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

இந்தச் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் 03.01.2023 அன்று திறக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறுகையில், “சாலைகள் அமைக்கப்படும்பொழுது அப்பகுதியில் உள்ள பெயர்ப்பலகைகள் மற்றும் அறிவிப்புகள் அடங்கிய பலகைகளை உள்ளபடியே பராமரிக்கப்படும். சாலைகளில் தேவையான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு செய்து வேலி அமைக்கப்படும்.

புதிய சாலைகள் அமைக்கப்படும் இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் தேவைப்படின் வண்டல் வடிகட்டித் தொட்டிகள் அமைக்கப்படும். சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் மற்றும் மழைநீர் வடிகால் இல்லாத உட்புறச் சாலைகளில் மழைநீர் எளிதில் வெளியேறும் வகையில் சாலையின் இருபுறமும் சிறிய வடிகால் (Saucer Drain) அமைத்தல் போன்ற பணிகளும், சாலைப் பணிகளுடன் இணைத்து மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZ2h0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTE1MzAxLXJlbGF5aW5nLTM3OS1yb2Fkcy1pbi1jaGVubmFpLWNvc3Qtb2YtcnMtNDUtY3JvcmVzLmh0bWzSAQA?oc=5