சென்னையில் இனி வாழ முடியுமா? என்னென்ன பிரச்சினைகள்? மாநகராட்சி புது பிளான்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்
சென்னை மாநகராட்சி… தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சி. அதுமட்டுமின்றி மாநிலத்தின் தலைநகர். 1.1 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உடன் நாளுக்கு நாள் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற விஷயங்களுக்காக சென்னையை நோக்கி அதிக அளவில் மக்கள் இடம்பெயர்கின்றனர். இதனால் குடியிருப்புகள் மிகவும் இறுக்கமான சூழலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளன.

நெருக்கடியில் சென்னை

காற்று மாசுபாட்டில் தொடங்கி நீர், நிலம் என வெவ்வேறு விதங்களில் சுற்றுச்சூழல் சிக்கல்களை சந்திக்கிறது. மறுபுறம் சென்னையின் பரப்பளவு புறநகர்ப் பகுதிகளை இணைத்துக் கொண்டு விரிவடைந்து கொண்டே செல்கிறது. புதிய கட்டிடங்கள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மால்கள், ஓட்டல்கள் என வந்து கொண்டே இருக்கின்றன.

மீட்டெடுக்க திட்டம்

தனி நபர் வாகனப் பயன்பாடு விண்ணை முட்டும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இப்படியான சூழல் சென்னை மாநகருக்கு நல்லதல்ல. காற்று மாசுபாடு அளவில் Moderate எனப்படும் சுமாரான நிலையை தான் பெற்றிருக்கிறது. இது வருங்காலங்களில் மிக மோசமான நிலையை அடைய அதிக வாய்ப்புள்ளது. இப்படியான சூழலில் சென்னையை மீட்டெடுக்க புதிய திட்டங்கள் தேவைப்படுகின்றன.

சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் எப்போது தொடங்கும்? மத்திய அரசின் பதில்!

ஆன்லைன் சர்வே

இதற்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. இதற்கு EASE OF LIVING 2022 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, Citizen Perception Survey எனப்படும் குடிமக்களின் பார்வையில் சென்னை எனக் குறிப்பிட்டு (https://eol2022.org/CitizenFeedback%2c) ஆன்லைனில் கருத்துக்கணிப்பு நடத்த முடிவு செய்துள்ளது.

என்னென்ன விவரங்கள்?

இதில் பதிவு செய்யப்படும் விவரங்கள் சென்னை மாநகராட்சியை நேரடியாக சென்றடையும். மேலும் சென்னைக்கான மேம்பட்ட திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த ஆன்லைன் கருத்துக்கணிப்பில் சென்னை மாநகரில் சாலைகள் எப்படி இருக்கின்றன? கழிவுநீர் வடிகால்களின் நிலை என்ன? மாசுபாடு? பாதுகாப்பு? வாடகைக்கு வசிக்கிறீர்களா? இல்லை சொந்த வீடா?

களமிறங்கிய மத்திய அரசு

சென்னையில் வசிக்கும் போது சராசரியாக எவ்வளவு செலவாகிறது? வேலைவாய்ப்பு? சுகாதார வசதிகள்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதேபோல் நாட்டின் பிற நகரங்களுக்கும் கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. இவை அனைத்தும் முடிவடைந்த பிறகு, எந்த நகரம் வாழ்வதற்கு ஏற்றது என்ற தலைப்பில் மத்திய அரசு பட்டியல் ஒன்றை வெளியிடும்.

சென்னை மாநகராட்சி திட்டம்

இது குடிமக்களுக்கு மட்டுமின்றி அரசு தரப்பிற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், சென்னை மாநகராட்சி ஏற்கனவே சிறந்த வாழ்விடங்களின் பட்டியலில் முன்னிலையில் தான் இருக்கிறது. இதனை கடந்த கால தர வரிசை பட்டியல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: தள்ளி போகிறதா திறப்பு விழா? சேகர்பாபு பதில்!

தரவரிசை பட்டியல்

ஆனால் அதிகப்படியான குடிமக்கள் தங்கள் கருத்துகளை ஆன்லைனில் பதிவு செய்யாத சூழல் ஏற்படும் போது சென்னை பின்னடைவை சந்திக்கிறது. இதுபோன்ற சூழல்களில் குறைந்த உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட நகரங்கள் முன்னிலை பெற்று விடுகின்றன. எனவே சென்னை மாநகராட்சி குறித்து கருத்து தெரிவிக்க அனைத்து சென்னைவாசிகளும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மிடில் கிளாஸ் வாழ முடியுமா?

குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களின் மனநிலையே ஒரு நகரின் உண்மை நிலையை எடுத்துரைக்கும் எனச் சொல்லப்படுவது உண்டு. அந்த வகையில் மிடில் கிளாஸ் மக்கள் அதிக அளவில் ஆன்லைனில் கருத்து தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMimAFodHRwczovL3RhbWlsLnNhbWF5YW0uY29tL2xhdGVzdC1uZXdzL2NoZW5uYWktbmV3cy9ncmVhdGVyLWNoZW5uYWktY29ycG9yYXRpb24td2FudHMtdG8ta25vdy1nb29kLWFuZC1iYWQtdGhpbmdzLWFib3V0LXRoZS1jaXR5L2FydGljbGVzaG93Lzk2MjcxNTY0LmNtc9IBnAFodHRwczovL3RhbWlsLnNhbWF5YW0uY29tL2xhdGVzdC1uZXdzL2NoZW5uYWktbmV3cy9ncmVhdGVyLWNoZW5uYWktY29ycG9yYXRpb24td2FudHMtdG8ta25vdy1nb29kLWFuZC1iYWQtdGhpbmdzLWFib3V0LXRoZS1jaXR5L2FtcF9hcnRpY2xlc2hvdy85NjI3MTU2NC5jbXM?oc=5