இப்படியொரு ஆச்சரியப் பெயர்; சென்னை சிஏஏ போராட்ட பெண்ணிற்கு பிறந்தது பெண் குழந்தை! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
FOLLOW US ON
டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் இஸ்லாமிய மக்கள் திரண்டெழுந்து மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னையின் வண்ணாரப்பேட்டையில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

சென்னையின் “ஷாகீன் பாக்” என்று அழைக்கும் அளவிற்கு போராட்டம் பிரபலமடைந்து விட்டது. இரவு பகல் பாராமல் பெண்கள், குழந்தைகள் என பலரும் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்றுடன் 17 நாட்கள் ஆகின்றன.

சிஏஏவிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சென்னை பாரதி நகர் குறுக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த சதாம் உதீன் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். கர்ப்பிணியான இவரது மனைவி நசீமா ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த குழந்தைக்கு ”ஷாகீனா” என்று பெயர் சூட்டியுள்ளனர். இதுபற்றி பேசிய சதாம் உதீன், சிஏஏவிற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.

டெல்லியில் போராட்டக் களமாக திகழும் “ஷாகீன் பாக்” என்பதன் நினைவாக எங்கள் குழந்தைக்கு “ஷாகீனா” என்று பெயர் வைத்துள்ளோம். பிரசவத்திற்கு முன்பு எனது மனைவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மாதவரம் ரசாயனக் கிடங்கில் எப்படி தீப்பிடித்தது? காற்று மாசு ஏற்பட்டுள்ளதா? சேத விவரம் என்ன?

இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தேன். அப்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார். இதைக் கேட்ட வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் எனது மனைவி, குழந்தைக்காக ஒன்றாக தொழுகை நடத்தினர்.

இருவரும் நலமுடன் வீடு திரும்புவர் என்று எனக்கு நம்பிக்கை அளித்தனர். சென்னையில் நடைபெற்று வரும் போராட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு ஒரு தம்பதிக்கு திருமணமும், இந்து பெண்ணிற்கு வளைகாப்பும் நடந்துள்ளது. இவை இந்துக்களும், இஸ்லாமியர்களும் உடன்பிறப்புகள் தான் என்பதைக் காட்டுகிறது என்றார்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/girl-child-named-with-the-memory-of-shaheen-bagh-at-chennai-caa-protest/articleshow/74438322.cms