நீர்நிலைகளின் இருப்பு என்ன? இந்த கோடையை சமாளிக்குமா சென்னை? – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
கோப்புப் படம்

  • Share this:
கடந்த ஆண்டு கோடையில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை சந்தித்த சென்னை இந்த கோடையை எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தண்ணீர் பஞ்சம் சிங்கார சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிப்போன ஒரு கடுமையான சொல். கடந்த ஆண்டு கோடையில் சென்னை மக்கள் சந்தித்த தண்ணீர் பஞ்சத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தண்ணீர் இல்லாமல் உணவங்கள் மூடப்பட்டன, ஐடி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன, விடுதிகளில் தண்ணீர் இல்லை. இரவிலும் கண்விழித்து ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் காத்திருந்தனர்.

கடந்த ஆண்டு இத்தனை பெரிய வறட்சியை சந்திக்க மிக முக்கிய காரணம் சென்னையின் பிரதான நீர் ஆதாரங்களாக விளங்கும் சோழவரம், புழல், பூண்டி ஏரிகள் வறண்டுவிட்டதும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததுமே ஆகும். இதே நிலை தொடர்ந்தால் அன்றாட வாழ்வை நகர்த்தி செல்வதே மிக கடுமையான ஒன்றாகிவிடும் என அச்சப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் வேலூரில் இருந்து தண்ணீரை சுமந்து வந்த ரயிலும் அதனை தொடர்ந்து கை கொடுத்த பருவமழைகளும் நிம்மதி பெருமூச்சு விட செய்தன.இனி மீண்டும் இந்த ஆண்டு கோடையை எதிர்கொள்ள தயாராகிவிட்டது சென்னை. கோடை துவங்குவதற்கு முன்பே வெயில் வெளுத்து வாங்கத்தொடங்கிவிட்டது இந்த கோடையை எப்படி சமாளிப்பது என்ற அச்சம் மக்கள் மத்தியில் மேலோங்கத் தொடங்கிவிட்டது.

ஆனால் சென்னை கோடையை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது கடந்த ஆண்டு கைகொடுத்த பருவ மழை, ஆந்திராவில் இருந்து வந்த கிருஷ்ணா நதி நீர் இந்த ஆண்டு சென்னையை பஞ்சத்தில் இருந்து காத்தது. இதனால் சென்னையின் முக்கிய நீர் ஆதரங்களில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் இன்றைய நிலவரப்படி 2552 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதே ஏரியில் கடந்த ஆண்டு இந்த நாளில் 449 மி.கனஅடி நீர் மட்டுமே இருப்பு இருந்தது.இதேபோல் 3231 மி.கனஅடி கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 1473 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே ஏரியில் 472மி.கனஅடி மட்டுமே இருப்பு இருந்தது

3645 மி.கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2043மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது கடந்த ஆண்டு இதே நாளில் வெரும் 19 மி.கனஅடி நீர் மட்டுமே இருந்தது.

கிருஷ்ணா நீரும் பருவ மழையும் கைகொடுத்ததால் கடந்த ஆண்டு வரண்டு கிடந்த ஏரிகளில் இந்த ஆண்டு நீர் நிறைந்திருக்கிறது. அதே போல் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்திருப்பதால் கடந்த ஆண்டைப்போன்று சென்னை இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சத்தை சந்திக்காது

இதேபோல் ஒருநாளைக்கு 1500மி.லிட்டர் கழிவு நீர் சென்னையில் உற்பத்தியாகிறது கழிவு நீரை சுத்திகரித்து நீர் நிலைகளை தூர்வாரி, அந்த அந்த பகுதிகளில் நீரேற்று நிலையங்களை வைத்து சுத்திகரிக்கப்படும் கழிவு நீரை நீர் நிலைகளில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

நீர் நிலைகளில் கிடைக்கும் நீர், நிலத்தடி நீர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நீரை வைத்து இந்த கோடையை சமாளித்துவிடலாம் என்றாலும் கூட நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது தண்ணீர் சிக்கனம். முடிந்த வரை சிக்கனமாக பயன்படுத்தி பஞ்சத்திற்கு வழிகொடுக்காமல் வாழ்வோம்.

Also see…

[embedded content]


First published: March 4, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-chennai-which-suffered-a-huge-water-shortage-last-year-has-raised-the-question-of-how-it-will-face-this-summer-vin-262947.html