சென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு: 4 பேர் சரண்! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை அண்ணா சாலை நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி குழுக்களின் மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் மதுரையில் சரணடைந்துள்ளானர்.

சென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், ரவுடி குழுக்களுக்கு இடையேயான மோதலை அம்பலப்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த 10 நிமிடங்களில், காரின் பதிவு எண், பைக்கின் பதிவு எண் ஆகியவற்றைக் கொண்டு ரவுடி கும்பல் மோதலை உறுதி செய்தனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், ரவுடிகள் ஒழிப்பு படை அதிகாரிகள், ஒட்டுமொத்த தரவுகளையும் திரட்டினர்.தனிப்படை போலீசார் களமிறக்கப்பட்டு, பைக் உரிமையாளர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர். பரபரப்பான விசாரணையில், காரில் சென்ற ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி ஆகியோரை கொலை செய்யும் நோக்கில், குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னையில் சட்டம் பயின்ற செந்தில்குமார், 15 ஆண்டுகளுக்கு முன்பு, தண்டையார்பேட்டை பகுதியில் நடந்து வந்த நிறுவனத்தில் கல்வெட்டு ரவியிடம் பணியாற்றி வந்தார்

குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட ரவியை தாக்க, ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி ஆகியோரது கூட்டாளிகள் முயன்ற போது, அவரைக் காப்பாற்ற செந்தில் குமார் களம் இறங்கினார்.செந்தில் குமாராக களமிறங்கியவர், ஸ்கெட்ச் போடுவதிலும், சம்பவம் எனப்படும் குற்றச் சம்பவங்களை துல்லியமாக செய்வதால், சம்பவம் என்ற அடைமொழி சம்போ செந்தி்ல் என அழைக்கப்பட்டார்.

திட்டம் தீட்டுவது, களத்தில் புலி போல் பதுங்கி பாய்வது, சம்பவத்தை செய்துவிட்டு மின்னலாக மறைவது ஆகியவற்றில் சம்போ செந்திலை விஞ்ச தமிழகத்தில் ஆள் இல்லை என்று சொல்லப்படுகிறது.

வசதிபடைத்த குடும்ப பின்னணியில் இருந்து வந்துள்ள சம்போ செந்தில், வெங்கடேஷ் பண்ணையாருக்கு நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு காவல் எல்லையில் வழக்கறிஞர் காமேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சம்போ செந்தில், பின்னர் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

திருப்போரூர் ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திரகுமார் கொலை வழக்கில், சம்போ செந்தில் மூளையாக செயல்பட்டார் என்று காவல்துறை கூறுகிறது.

முத்தியால்பேட்டையில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி என்று சொல்லப்பட்ட விஜயகுமார் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் சம்போ செந்தில் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், இதுவரைக்கும் எந்த வழக்கிலும் சம்போ செந்திலை போலீசாரால் கைது செய்யமுடியவில்லை. ஒரு கட்டத்தில், ரவுடி கல்வெட்டு ரவி ஒதுங்கிவிட, ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி உள்ளிட்ட கும்பலுக்கு எதிர்க்கும் பல தலைவனாக சம்போ செந்தில் வலுவாக வளர்ந்து விட்டார்.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எண்ணூரில் காருக்குள் வைத்து ஒப்பந்ததாரர் ஜேம்ஸ்பால் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எண்ணூர் இந்த கும்பலுக்குள் பகை வெடித்துள்ளது.

ஒருவர் மாறி ஒருவர் என இரு கும்பலுக்கும் இடையில் நடந்த மோதலில் இதுவரை 5க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்கிறது சென்னை காவல்துறை.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சம்போ செந்திலின் கூட்டாளிகள் ஈசா மற்றும் எலி யுவராஜ் ஆகியோரின் ஏற்பாட்டின் அடிப்படையில்தான், அண்ணா சாலை தாக்குதல் திட்டம் தயாரானதாக காவல்துறை சொல்கிறது.

இந்த நிலையில், தேனம்பேட்டை குண்டுவீச்சு சம்பவத்தில் சம்பவத்தில் களத்தில் செயல்பட்ட கம்ரூதின், ஜான்சன், பிரசாந்த், ராஜசேகர் ஆகியோர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். சரண் அடைந்துள்ளவர்கள், தேனாம்பேட்டையில் பைக்கில் வந்து, சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் மீது குண்டு வீசியவர்கள் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

Also see… 

[embedded content]

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-chennai-bomb-explosion-case-4-people-surrendered-in-madurai-vaiju-264119.html