தி கிரேட் எஸ்கேப்- பெரியாரை அவதூறாக பேசிய ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு டிஸ்மிஸ் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

image

நடிகர் ரஜினிகாந்த் கருத்தை குறை கூறுவது அராஜகமான செயல்.. எஸ் வி சேகர் – வீடியோ

சென்னையில் துக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர், சீதை உருவ படங்கள் நிர்வாணமாக கொண்டுவரப்பட்டு செருப்பு மாலை போடப்பட்டது என கூறியிருந்தார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தின் இந்த பேச்சுக்கு திராவிடர் இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிகாந்த் பேசியது உண்மைக்கு புறம்பானது; தந்தை பெரியாருக்கு அவதூறை ஏற்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார் என திராவிடர் இயக்கத்தினர் விளக்கம் அளித்தனர்.

ரஜினிகாந்த் மறுப்பு

மேலும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திராவிடர் இயக்கத் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் ரஜினிகாந்தோ தாம் பேசியது சரிதான்; தம்முடைய பேச்சுக்கு ஆதாரமாக அவுட்லுக் கட்டுரை இருக்கிறது; அதனால் தாம் பேசியதற்காக வருத்தமோ மன்னிப்பு கேட்கப் போவதில்லை என திட்டவட்டமாக கூறினார். இதனால் சர்ச்சை ஓயவில்லை.

ரஜினி மீது புகார்

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் மனு கொடுத்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு அருகே தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதனால் பெரும் பதற்றம் உருவானது.

ஹைகோர்ட்டில் வழக்கு

சேலத்தில் ராமர் சிலையை முன்வைத்து பஜனை ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த அசாதாரண சூழ்நிலைகளுக்கு ரஜினிகாந்த் பேசிய அவதூறு பேச்சுதான் காரணம்; ஆகையால் அவர் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தந்தை பெரியார் மிகப் பெரும் தலைவர்; அவரை அவதூறாக பேசினால் சட்ட நடவடிக்கை பாயும்; போலீசில் புகார் கொடுத்திருப்பதால் கால அவகாசத்துக்குப் பின்னர் வழக்கு தொடரலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

எழும்பூர் கோர்ட்டில் வழக்கு

இதனடிப்படையில் போலீசாருக்கு திராவிடர் விடுதலை கழகம் கால அவகாசம் அளித்தது. ஆனால் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து சென்னை எழும்பூர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

ரஜினி வழக்கில் உத்தரவு

இருதரப்பில் பகைமையை ஏற்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் பேசியுள்ளதாகவும் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் வழக்கறிஞர் கான்சியஸ் இளங்கோ மனுத் தாக்கல் செய்தார். இதனை நீதிபதி ரோஸ்லின் துரை விசாரித்தார். பின்னர் இந்த வழக்கில் இன்று உத்தரவு வழங்குவதாக நீதிபதி ரோஸ்லின் துரை உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். இதனிடையே ரஜினி மீது வழக்கு பதிய உத்தரவிட கோரிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-egmore-to-issue-order-in-case-against-rajinikanth-379255.html