309 நாள்களில் 5.7 லட்சம் பேர் பயணம்: – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை- மதுரை இடையே இயக்கப்படும் அதி விரைவு ரயிலான தேஜஸ் ரயில், தனது முதல் ஆண்டு சேவையை நிறைவு செய்து 2-ஆவது ஆண்டு சேவையை தொடங்கியுள்ள நிலையில், இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
 இந்த ரயில் சேவை தொடங்கப்பட்ட 2019-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி முதல் நிகழாண்டில் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை (309 நாள்களில்) இரு மார்க்கங்களிலும் 5 லட்சத்து 7 ஆயிரத்து 57 பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம், ரூ.49 கோடியே 74 லட்சம் வருவாய் ரயில்வே நிர்வாகத்துக்கு கிடைத்துள்ளது.
 ஆறரை மணி நேரத்தில் சென்றடையும்: அதி வேகத்தில் செல்லக்கூடியதும் நவீன வசதிகளுடன் கூடியதுமான தேஜஸ் சொகுசு ரயிலை, சென்னை பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) தயாரித்து,  தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒப்படைத்தது. இதையடுத்து, இந்த ரயில் சேவை, சென்னை-மதுரை இடையே கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில்  சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடைகிறது. இதுபோல மறு மார்க்கத்தில்,  மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்குப் புறப்பட்டு, சென்னைக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடைகிறது. திருச்சி, கொடை ரோடு ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்லும். வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாள்களிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
 சென்னை-மதுரை இடையே 496 கி.மீ. தூரத்தை 6 மணி நேரம் மற்றும் 30 நிமிஷங்களில் தேஜஸ் ரயில் அடைகிறது. இந்த ரயிலில் ஒரு எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் பெட்டியும்,  12 வழக்கமான சேர் கார் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில்  56 இடங்களும், வழக்கமான சேர் காரில் 78 இடங்களும் உள்ளன. இந்த ரயிலில் தொடக்கத்தில் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழுமையாக நிரம்பியது. இதன்பிறகு, படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வந்தது.
 5 லட்சம் பேர் பயணம்: இதற்கிடையில், இந்த விரைவு ரயில் தனது முதல் ஆண்டு சேவையை நிறைவு செய்து, 2-ஆவது ஆண்டில் அடியெடுத்துள்ள நிலையில், இந்த ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது புள்ளிவிவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
 கடந்த ஆண்டு ( 2019) மார்ச் 2-ஆம் தேதி முதல் நிகழாண்டில் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை (309 நாள்களில்) இரு மார்க்கங்களிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம், ரூ.49 கோடியே 74 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அவசர பயணம் மேற்கொள்வோர், தொழில் சம்பந்தமாக வந்து செல்வோர் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் இந்த ரயில் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.
 குறைபாடுகள் சரி செய்யப்படும்: இது குறித்து தெற்கு  ரயில்வே அதிகாரிகள் கூறியது:
 தேஜஸ் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் கட்டணம் உயர்வு என்று கருத்து தெரிவித்தனர். எனினும், இதில் செய்யப்பட்டுள்ள உலக தர வசதிகள் பயணிகளை கவர்ந்துள்ளது. இதனால், பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தைவிட  அதிக பயணிகள் பயணம் செய்தனர்.
 அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் பயோ கழிவறையில் பிரச்னை இருந்தது. அது சரிசெய்யப்பட்டது.
 மேலும், இந்த ரயிலில் சிறப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. பயணிகளின் கருத்துகளை கேட்டு, அதன் அடிப்படையில் பயணிகளுக்கு தரமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
 நவீன வசதிகள்: இந்த ரயிலில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதி நவீன வசதிகளுடன் இயக்கப்படுகிறது. ரயிலின் கழிவறையில் தொடு திரை வசதி கொண்ட எல்.இ.டி. விளக்குகள், ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் வைஃபை வசதியுடன் கூடிய மேஜிக் பாக்ஸ் திரைகள், செல்லிடப்பேசிக்கு சார்ஜ் ஏற்றும் வசதிகள், உள்புற வெளிப்புற தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ். அடிப்படையிலான பயணிகள் தகவல் அறியும் வசதி, ரயில் பெட்டிகளின் உள்புறம் மற்றும் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா, பயோ கழிவறைகள் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/mar/11/309-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-57-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-3378614.html