`மால்கள் முதல் மெடிக்கல் வரை..!’ – சென்னை எப்படி இருக்கிறது? #SpotVisit #Corona – Vikatan

சென்னைச் செய்திகள்

உலகளவில் லட்சக்கணக்கான நபர்களைப் பாதித்துள்ள கொரோனா வைரஸானது இந்தியாவிலும் தொடர்ந்து பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸால் இதுவரை 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே, கொரோனா வைரஸ் தொற்றை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. பல மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசும் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டமானது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்ள நேற்று நடைபெற்றது. பின்னர், தமிழக அரசானது கல்வி நிலையங்கள், மால்கள், அரங்குகள், பார்கள் உட்பட பொதுமக்கள் கூடும் பரவலாக அறியப்பட்ட இடங்களை வரும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டது. இந்த நிலையில், `சென்னை எப்படி இருக்கிறது?’ என்பதைத் தெரிந்துகொள்ள சில முக்கிய இடங்களுக்கு புகைப்படக்காரருடன் ஸ்பாட் விசிட் செய்தோம்.

ஸ்பென்ஸர் பிளாசா

சென்னைக்கு மிக அருகில் எப்போதும் இருக்கும் சூரியனின் வெயில், சிக்னல்கள், டிராஃபிக், கூட்டமான டீக்கடைகள் என வழக்கமான பரபரப்புடன் சென்னை இயங்கிக்கொண்டிருந்தது. ஸ்பென்ஸர் பிளாசாவின் முன்னர் சிலர் கூட்டமாக நின்று காவலாளிகளுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அருகில் சென்றோம். `தமிழக அரசு உத்தரவிட்டதன்படி மால்கள் மூடப்பட்டுள்ளன’ என்பதைக் காவலாளிகள் பொதுமக்களுக்கு கூறி ஸ்பென்ஸர்க்கு வருகை தந்தவர்களைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தனர். மால்களுக்கு உள்ளே இருக்கும் கடையின் உரிமையாளர்கள், வேலை செய்பவர்கள் உட்பட யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. முகமூடிகள் அணிந்தபடி அவர்கள் தங்களது பணிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தனர். மால்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள், “கொரோனா கடைசில நம்ம நாட்டுலயும் என்ட்ரி ஆயிடுச்சு. கொஞ்சம் பயமாதான் இருக்கு. எதுக்கும் வீட்டுலயே இருக்குறதுதான் நல்லதுபோல” என்று வேடிக்கையாகக் கூறியபடி நகர்ந்தனர்.

Source: https://www.vikatan.com/news/tamilnadu/a-small-spot-visits-in-chennai-amid-of-corona-related-fear