சென்னை தி.நகர் நிலைமையா இது.. கோபம், கோபமா வருகிறது.. மனதை கனக்க வைக்கும் அந்த ஒரு படம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை என்று கூறியதும் சட்டென அனைவர் மனதிலும் நினைவுக்கு வருவது மெரினா கடற்கரை, சட்டசபை கட்டிடம்.. அடுத்தபடியாக தி.நகர்.

சென்னையில் உள்ள மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்.. அவ்வளவு ஏன், அண்டை மாநிலங்களில் இருந்து கூட ஷாப்பிங் செய்வதற்கான ஒரு பகுதியாக மக்கள் நினைப்பது தி.நகர்.

புடவை வேண்டுமா, நகை வேண்டுமா, செருப்பு வேண்டுமா, குண்டூசி முதல் விமானம் வரை ஒரே இடத்தில் கிடைக்கும் என்பார்களே, கிட்டத்தட்ட அது போன்ற ஒரு இடம் தான் சென்னை தி.நகர்.

imageகொரோனா டெஸ்ட் நடைமுறை இந்தியாவில் சரியில்லை.. இப்படி இருந்தால் நிலை மோசமாகும்.. நிபுணர்கள் வார்னிங்

கூட்டம் அதிகம்

எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கும். அதிலும் பண்டிகை காலம் என்று சொல்லிவிட்டால், மேலே இருந்து ஒரு பொருளைப் போட்டால் அது தரையில் சென்று விழாது.. யாராவது ஒருவரின் தலையில் தான் விழும் என்கிற அளவுக்கு இடைவெளியின்றி மக்கள் கூட்டம், நெரிசல் காணப்படும்.

புகைப்படம்

தி.நகரில் அமைந்துள்ள அத்தனை கடைகளிலும் திறந்தது முதல் மூடப்படும் நேரம் வரை வாடிக்கையாளர்கள் இல்லாத நிலையே காணப்படாது, இப்படியான புகழ்பெற்ற தி.நகர் இப்போது எப்படி இருக்கிறது, என்பதைச் சொல்ல இந்த ஒரு புகைப்படம் போதும். அத்தனை மால்களும், பெரிய கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் வெறிச்சோடி கிடக்கிறது தி.நகர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, பிறருடன் கலந்து பேச வேண்டாம் என்று அரசு எச்சரிக்கை விடுத்து இருப்பதால், கூட்டமாக சேருவதை தவிர்க்கிறார்கள்.

கிரிக்கெட்

இந்த நிலையில்தான் தி.நகரில் இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க கூடிய ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு மைதானத்தில் விளையாட்டுப் போட்டி நடப்பது வழக்கம், ஆனால் தி.நகரில் இப்படி ஒரு நிலைமையா என்று மனதை கனக்கச் செய்கிறது இந்த புகைப்படம்.

கோபம்

நிலைமையை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காக புகைப்படம் எடுப்பதற்காக இவ்வாறு ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டதா, அல்லது தொடர்ந்து ஆட படுகிறதா என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும்.. எப்படி இருந்த தி.நகர் இப்படி ஆகி விட்டதே என்ற எண்ணம் மட்டும் வருகிறது. அந்த பகுதியின் வியாபாரத்தை நம்பிக் கொண்டிருந்த எத்தனையோ, வியாபாரிகள், தொழிலாளர்கள் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் மீது நமக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-youngsters-playing-cricket-at-t-nagar-in-chennai-380174.html