கொரோனா: சென்னையில் ஊரடங்கு உத்தரவு!! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் முக்கிய நிகழ்வாக, நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றிரவு 9 மணியுடன் இந்த நடைமுறை முடிவுக்கு வருகிறது.

இருப்பினும், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகமாக வாய்ப்புள்ளதாக கருதப்படும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 75 மாவட்டங்களில், வரும் 31 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா; எண்ணிக்கை 7ஆக உயர்வு

இதில், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த ஊரடங்கு உத்தரவு (144) அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10 மாவட்டங்களிலும், கேரளாவில் ஒன்பது மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களில் பால், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.

பிற பொதுப் போக்குவரத்து சேவைகள் வழங்கப்படமாட்டாது. பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூட கூடாது. மூன்று மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்படும். வங்கிகள், ஏடிஎம்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட வை மட்டும் திறந்திருக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமலில் இருக்கும்.

கொரோனா: நிவாரண நிதி அளிக்கும் திமுக!!

குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் ஆயிரக்கணக்கானோர் அவரவர் வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், ஈரோடு அரசு மருத்துவமனையிலும் கொரோனா பாதிப்புக்கு சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர், கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

எனவே, கொரோனா பாதிப்பு, அறிகுறிகள் அதிகம் காணப்படும் மாவட்டங்கள் என்ற அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/curfew-imposed-in-chennai-till-march-end-amid-coronavirus-precautions/articleshow/74760366.cms