வெளிமாவட்டங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கும் பணி: காவல்துறையிலிருந்து சென்னை மாநகராட்சிக்கு மாற்றம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

வெளிமாவட்டங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கும் பணி காவல்துறை மூலம் வழங்கப்பட்டது. இப்போது அப்பணி சென்னை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களுக்குச் செல்லக் கோரும் பொதுமக்கள் இனி சென்னை மாநகராட்சியில் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் விதமாக முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை அமலில் உள்ளது. பொதுமக்கள் தங்களுடைய சில குறிப்பிட்ட அத்தியாவசிய நிகழ்ச்சிகளை, முன்கூட்டியே முடிவு செய்து திருமணம், சுகாதாரம் சம்பந்தமான காரணங்கள் மற்றும் எதிர்பாராத விதமான மரணம் ஆகியவற்றிற்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் பயணம் மேற்கொள்வது அவசியமாகிறது.

இத்தகைய தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பயணம் செய்ய விரும்புவோருக்கு பயண அனுமதிச் சீட்டை பெருநகர சென்னை மாநகராட்சி வழங்குகிறது. சென்னைக்குள்ளேயே பயணம் செய்ய விரும்புவோர் சம்பந்தப்பட்ட சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டிற்குள் பிற மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய விரும்புவோர் துணை ஆணையர் (பணிகள்) அல்லது தங்கள் இருப்பிடத்திற்கு தொடர்பான சம்பந்தப்பட்ட வட்டார ஆணையரிடம் (வடக்கு, மத்திய, தெற்கு) பெற்றுக்கொள்ளலாம்.

பிற மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியூருக்கு செல்வோர் எங்கு “வாகன பாஸ்” வாங்க வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. நேற்று வரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதற்கென அமைக்கப்பட்ட துணை ஆணையர் தலைமையிலான கட்டுப்பாட்டறை மூலம் வழங்கப்பட்டது. இதனால் சென்னை காவல்துறைக்கு 3 நாளில் 9,300 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 70 சதவீதம் பரிசீலிக்கத் தகுதியில்லாதவையாக இருந்தன. இதில் 115 பேருக்கு மட்டும் காவல்துறை பாஸ் கொடுத்தது.

இந்நிலையில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமலானதை அடுத்து பாஸ் வழங்கும் பொறுப்பு சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியருக்கும் வழங்கப்படுவதாக கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து சென்னை காவல்துறைக்குப் பதிலாக சென்னை மாநகராட்சி பாஸ்களை வழங்குகிறது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/547200-permission-to-go-other-districts-transition-from-police-to-chennai-corporation.html