Plan to divide Chennai into three areas based on corona vulnerability: Chennai corporation decision – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை : சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை 3 பகுதிகளாக பிரித்து பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான விதிகளை அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.  சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் வரை சென்னையில் 211 ேபர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக திரு.வி.க நகரில் 30 பேரும், கோடம்பாக்கத்தில் 24 பேரும், அண்ணா நகரில் 22 பேரும், தண்டையார்பேட்டையில் 19 பேரும், அடையாறு மற்றும் பெருங்குடியில் தலா 7 பேரும், வளசரவாக்கத்தில் 5 பேரும், திருவெற்றியூரில் 4 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூரில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணலி மற்றும் அம்பத்தூரில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்த பாதிப்பு அடிப்படையில் சென்னையை மூன்றாக பிரித்து ஊரடங்கு விதிகளை கடுமையாக அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதில் அதிக பாதிப்பு உள்ள ராயபுரம் மண்டலம் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. இதில் ஊரடங்கு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும். இதேபோன்று திரு.வி.க. நகர், கோடம்பாக்கம், அண்ணா நகர், தண்டையார்பேட்ைட உள்ளிட்ட மண்டலங்களிலும் விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர்த்து மீதம் உள்ள மண்டலங்களில் சில விதிகள் தளர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. தமிழக அரசு தற்போது மாவட்டங்களை பிரித்துள்ள சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என்று மூன்று பகுதியாக சென்னையின் மண்டலங்களை பிரித்து இதை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது

Source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=579377