சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை முதல் மூடல்.. 7ம் தேதி முதல் திருமழிசையில் மார்க்கெட்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க கோயம்பேடு மொத்த விலை நாளை சந்தையை தற்காலிகமாக மூடிவிட்டு, அந்த சந்தையை 7ம் தேதி முதல் திருமழிசைக்கு மாற்றுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தை மூலம் சுமார் 300 பேருக்கு தமிழகம் முழுவதும் கொரோனா பரவியதால் மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய தொழிலாளிகள் வியாபாரிகள், காய்கறி வாங்கியோர் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 100க்கும் மேற்பட்டோருக்கு கோயம்பேடு சந்தை வாயிலாக கொரோனா பரவி உள்ளது.

imageசென்னை அசோக் நகர் 11வது தெருவில் காய்கறி வாங்கிய 11 பேருக்கு கொரோனா.. தெருவுக்கு சீல்

சொந்த ஊரில் ஊழியர்கள்

அண்மையில் வியாபாரிகளுக்கு கொரோனா பரவியதால் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையில் பணியாற்றி வந்த கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

விழுப்புரத்தில் 70 பேருக்கு

கோயம்பேடு மூலம் கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதேபோல் கோயம்பேடு காய்கறி சந்தை வாயிலாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மூலம் விழுப்புரத்தில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையை சார்ந்து விழுப்புரத்தில் மட்டும் 70-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 7 பேர் கோயம்பேட்டில் இருந்து சென்ற வகையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

300 பேருக்கு கொரோனா

கோயம்பேட்டில் இருந்து காய்கறி லாரி மூலம் கரூர் சென்ற இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதியான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா தொற்று பரவியர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊர் சென்ற 7,500 பேரை கண்டறிய பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் முயற்சி செய்து வருகின்றன. அவர்களை தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளன.

கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது

இந்நிலையில் பலருக்கும் கொரோனா பரவ காரணமாக அமைந்த கோயம்பேடு சந்தை தற்காலிகமாக நாளை முதல் மூடப்படுகிறது. அங்கு செயல்பட்டு வரும் மொத்த விலை கடைகளை தற்காலிகமாக மே 7ம் தேதி முதல் திருமழிசையில் செயல்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.. ஏற்கனவே கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்ட தற்போது முதல்முறையாக சந்தை கோயம்பேட்டை விட்டு தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ளது.

வியாபாரிகள் கோரிக்கை

கோயம்பேடு மார்க்கெட் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை நாளை 05.05.2020 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற (7.5.2020) வியாழக் கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம். பொதுமக்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-koyambedu-market-may-temperaverly-closed-shops-may-shift-to-thirumalisai-384467.html