சென்னை கோயம்பேட்டில் கொரோனா தடுப்பு பணி- காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா- 8 போலீசாருக்கும் பாதிப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறை துணை ஆணையர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் சென்னை நகரில் 8 போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைதான் தமிழகத்தில் பல இடங்களில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக காரணமாகி வருகிறது. கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து சென்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு சென்ற 400-க்கும் அதிகமானோர் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இவர்களில் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் பலருக்கு கொரோனா பரிசோதனை முடிவு வர இருக்கிறது.

இதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் கோயம்பேட்டில் இருந்து சென்றவர்களால் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையர் ஒருவரின் ஓட்டுநருக்கு கொரோனா இருப்பதாக காலையில் தகவல் வெளியானது.

இதனையடுத்து காவல்துறை துணை ஆணையர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். தற்போது காவல்துறை துணை ஆணையருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தை பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காவல்துறை துணை ஆணையர் தலைமையிலான போலீசார் மேற்கொண்டிருந்தனர்.

இதனிடையே சென்னையில் மேலும் 8 போலீசாருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஒரு ஊழியருக்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chenai-ips-officer-tests-positive-for-coronavirus-384489.html