சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் 13 பேருக்கு இதுவரை டிஜிபி அலுவலக காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கடந்த இரு நாட்களாக ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றும் பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது.

கடந்த 3 நாட்களாக 250க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி 1724 ஆக இருந்த பாதிப்பு 2003 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4058 ஆக அதிகரித்துள்ளது.

டிஜிபி அலுவலகத்தில்

சென்னை மாநகரில் கொரோனா தடுக்க ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழக காவல்துறை தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலகத்தில் நோய் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

ஏற்கனவே 5 பேருக்கு பாதிப்பு

டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 2 காவலர்களுக்கு அண்மையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து இருந்தது. இந்நிலையில் சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டிஜிபி அலுவலகம் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் தினமும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதித்த காவலர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு பன்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அண்மையில் அண்ணாநகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் துணை கமிஷனரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதற்கிடையே சென்னை சூளைமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் சென்ற ரோந்து வாகன ஓட்டுனருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது உதவி ஆய்வாளருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அச்சத்தில் காவலர்கள்

சென்னையில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்களுக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனாவுக்கு எதிரான முன்கள வீரர்களாக பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் கொரோனா பாதிப்பு அச்சத்தை அதிகரித்துள்ளது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/eight-more-police-infected-with-covid-19-in-the-chennai-dgp-office-384658.html