தில்லியிலிருந்து 757 பயணிகளுடன் சிறப்பு ரயில் சென்னை வந்தது – தினமணி

சென்னைச் செய்திகள்

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் ஒன்றான ராஜதானி அதிவிரைவு சிறப்பு ரயில் சென்னையை வந்தடைந்தது. இந்த ரயிலில் வந்த 757 பயணிகள் கல்லூரிகள் மற்றும் தனியாா் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனா்.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு வெளி மாநிலங்களில் உள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக சிறப்பு ரயில்கள்

இயக்கப்படுகின்றன. குறிப்பாக தில்லியிலிருந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய

ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தில்லியிலிருந்து சென்னைக்கு ராஜதானி அதிவிரைவு சிறப்பு ரயில் இரண்டு நாள்களுக்கு மட்டும் இயக்கப்படுகிறது. முதல் ரயில் கடந்த புதன்கிழமை புறப்பட்டு தில்லியிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை சென்னையை வந்தடைந்தது. இந்த ரயிலில் வந்த பயணிகள் அனைவருக்கும் பிசிஆா் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தில்லியிலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்ட ராஜதானி அதிவிரைவு சிறப்பு ரயில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்த ரயிலில் 757 பயணிகள் வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/may/17/a-special-train-with-757-passengers-arrived-from-chennai-3416425.html