சென்னை புழலுக்கு சென்று திரும்பியபாளையங்கோட்டை ஜெயில் கைதிகள் 2 பேருக்கு கொரோனா – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை புழல் சிறைக்கு சென்று வந்த பாளையங்கோட்டை மத்திய ஜெயில் கைதிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

நெல்லை, 

சென்னை புழல் சிறைக்கு சென்று வந்த பாளையங்கோட்டை மத்திய ஜெயில் கைதிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் சிறைக்காவலர்கள், சக கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

2 கைதிகளுக்கு கொரோனா

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1,000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சாதாரண வழக்குகளின் விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும் போலீஸ் நிலையங்களில் கைது செய்யப்படுகிறவர்களில், பயங்கர செயலில் ஈடுபட்டோர் மட்டுமே சிறைக்கு அழைத்து சென்று அடைக்கப்பட்டு வந்தனர்.

பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வந்த நிலையிலும், பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை புழல் சிறைக்கு…

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு சில கைதிகள் அழைத்து செல்லப்பட்டிருந்தனர். அவர்களில் 5 பேர் கடந்த 17-ந்தேதி மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் சென்னையில் இருந்து வந்ததால், சிறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்களில் 2 பேருக்கு நேற்று முன்தினம் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு சந்தேகத்தின் பேரில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிருமி நாசினி தெளிப்பு

இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த கைதிகள் கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதவும், பயிற்சிக்கும் சென்றனர். கொரோனாவால் அங்கு சிக்கிக்கொண்டனர். இந்த நிலையில் சிறைத்துறை நடைமுறைப்படி மீண்டும் அவர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டனர்‘ என்றனர்.

கைதிகள் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது, சிறைக்காவலர்கள், சக கைதிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சிறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து, பிளச்சிங் பொடியும் தூவப்பட்டது. மேலும் அந்த கைதிகளுடன் தொடர்பில் இருந்த சிறைக்காவலர்கள், பிற கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Source: https://www.dailythanthi.com/News/Districts/2020/05/29081930/Returning-to-ChennaiCoronation-for-2-prisoners-in.vpf