சென்னை நகரை விட புறநகரில் அதிகரிக்கும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை நகரத்திற்குள் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில், தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை, தாம்பரத்தில் மட்டும் 76 கட்டுப்பட்டு மண்டலங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கும் அதே வேளையில், அன்று சென்னை நகருக்குள் மொத்தமாகவே 64 கட்டுப்பட்டு மண்டலங்கள் மட்டுமே இருந்தன.


நான்கு வாரங்களுக்கு முன்பு, சென்னையில் 369 கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருக்க, தாம்பரத்தில் அதன் எண்ணிக்கை 18 ஆக மட்டுமே இருந்தது. தற்போது, இந்த நிலைமை தலைகீழாகி இருக்கிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று

பல்லாவரத்தில் கடந்த மாதம் 28 கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருந்த நிலையில், இந்த மாதம் நிறைய தனிப்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “நெறிமுறை தற்போது மாறிவிட்டது. ஒரு தெரு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டுமெனில், அங்கு 5 முதல்நிலை பாதிப்புகள் அல்லது 20 பாஸிட்டிவ் தொடர்புகள் கண்டறியப்பட வேண்டும். அப்படி இல்லையெனில், பாதிப்பு கண்டறியப்பட்ட அந்த குறிப்பிட்ட வீடு மட்டுமே தனிமைப்படுத்தப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் மற்றும் பல்லாவரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிறது. இதுகுறித்து, செங்கல்பட்டு கோவிட்-19 தடுப்புப் பணி அதிகாரி உதயச்சந்திரன் ஐஏஎஸ் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பகுதிகளில் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டுமெனில், குறிப்பிட்ட அந்த வீட்டை மட்டும் தனிமைப்படுத்துவதை விடுத்து, அந்த தெருவையே தனிமைப்படுத்த வேண்டும்.

பாதிப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. ஆனால், எங்களால் முடிந்த சிறந்த பணியை கொடுத்து அதனை கட்டுப்படுத்த முயன்று வருகிறோம். ஆனால், தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு, தாம்பரம் தான் நுழைவு வாயிலாக உள்ளது. ஆகவே, அங்கு பரவலைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது” தாம்பரத்தைச் சேர்ந்த வருவாய் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி மறுப்பது ஏன் ? : உயர்நீதிமன்றம் கேள்வி

தாம்பரத்தில், 200 வீடுகளுக்கு ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, இருமல், குளிர், காய்ச்சல் அறிகுறியுடன் யாராவது இருக்கிறார்களா என்று சர்வே எடுப்பார். கிட்டத்தட்ட, 1500 பல்ஸ் ஆக்சிமீட்டர்ஸ் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டில் உள்ளோருக்கும் ஆக்சிஜன் அளவு மற்றும் உடல் சூடு பரிசோதனை செய்யப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-in-chennai-suburbs-have-more-containment-zones-than-city-201409/