கொரோனா: வட சென்னையில் அணிவகுத்து வந்த கமாண்டோஸ்.. தெறித்து ஓடிய புள்ளீங்கோ! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா வைரஸ் கோரத்தாண்டவத்தை கண்டு கொள்ளாமல் பொதுமக்கள் வீதிகளில் நடமாடி வருவதால் தலைநகர் சென்னையில் கமாண்டோ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். வடசென்னையின் முக்கிய வீதிகளில் கமாண்டோ படை வீரர்கள் அணிவகுத்து சென்றதைப்பார்த்து வீதிகளில் சுற்றித்திரிந்த பலரும் அலறியடித்துக்கொண்டு வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். கருப்பு சீருடையில் வலம் வந்த கமாண்டோ வீரர்களைப் பார்த்து வடசென்னைவாசிகளிடையே ஒருவித அச்சம் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாள்தோறும் 2500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் தினசரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அதனைக்கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தீவிர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் வீதிகளிலும் சாலைகளிலும் நடமாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது கூட கொரோன வைரஸ் உச்சம் தொட்டுதான் பின்னர் படிப்படியாக குறையும் என்று குறிப்பிட்டுள்ளார். சென்னையில் மட்டும் 45 ஆயிரம் பேரை தொட்டுப்பார்த்துள்ளது கொரோனா. வடசென்னை மண்டலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.

imageகொரோனாவை கட்டுப்படுத்த மதுரையில் தீவிரம்- நடமாடும் முகாம்கள்… வீட்டுக்கு வீடு பரிசோதனை

அடங்காத சென்னைவாசிகள்

ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் குறையவில்லை. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், அது அத்தனையும் பலனளிக்கவில்லை. மக்கள் நெருக்கம் மிகுந்த கொருக்குப்பேட்டை,புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.

கமாண்டோ அணிவகுப்பு

சென்னை பாதிப்பில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்த இரண்டு மண்டலங்களில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த வண்ணாரப்பேட்டை சரக காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கை முழுமையாக செயல்படுத்த சென்னை காவல்துறைக்கு வழங்கப்பட்ட கமாண்டோ வீரர்கள் வடசென்னை வீதிகளில் அணிவகுப்பு நடத்தினர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

எச்சரித்த கமாண்டோஸ்

வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சுப்புலட்சுமி தலைமையில் பொதுமக்கள் அதிகளவில் கூடிய திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எம் எஸ் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கமாண்டோ படை வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். கமாண்டோ படையினரின் அணிவகுப்பை தொடர்ந்து தேவையில்லாமல் வீதிகளில் சுற்றித்திரிந்தவர்கள் அலறியடித்து வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர். மக்கள் நெருக்கம் மிகுந்த கொருக்குப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்திய கமாண்டோ படயினர், வெளியே நடமாடிய மக்களை எச்சரித்து அனுப்பினர்.

சென்னையில் கொரோனா உச்சம்

சென்னையில் கொரோனா பாதிப்பு ஜூலை 3ஆம் தேதி உச்சம் தொடும் என்றும் அப்போது 21,268 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருப்பார்கள் என்று கொரோனா பரவல் தொடர்பான சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/covid-19-commando-force-arrives-in-north-madras-389359.html