ஆட்டோவில் கடத்த முயற்சி: சாதூர்யமாக தப்பிய சென்னை சிறுமிக்கு முதல்வர் பாராட்டு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் தன்னைக் கடத்த முயன்ற ஆட்டோ ஓட்டுநரின் கையைக் கடித்து சாதூர்யமாகத் தப்பிய 11 வயது சிறுமியின் மனோதிடத்தை முதல்வர் பாராட்டியுள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த சென்னை காவல்துறைக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை பெரவள்ளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி ஒருவர் கடந்த 14-ம் தேதி தனது வீடு அருகே உள்ள கடைக்கு சென்று திரும்பினார்.

அப்போது, தலைக்கவசம் அணிந்து ஆட்டோவை ஓட்டி வந்த இளைஞர், சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து ஆட்டோவில் ஏற்றிக் கடத்த முயன்றுள்ளார். இதை எதிர்பாராத சிறுமி கூச்சலிட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் சிறுமி முகத்தில் மயக்க மருந்து தெளிக்க முயன்றுள்ளார். அதற்குள் சுதாரித்த சிறுமி ஆட்டோ ஓட்டுநரின் கையைக் கடித்து விட்டுத் தப்பினார். இதற்கிடையில் ஆட்டோ ஓட்டுநரும் அங்கிருந்து ஆட்டோவை வேகமாக ஓட்டி தப்பிச் சென்றுவிட்டார்.

சிறுமி தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தைக்கூற இது குறித்து செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். ஆய்வாளர் திவ்யகுமாரி தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.

அந்தப்பகுதியில் சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் சிறுமியை கடத்த முயன்ற ஆட்டோ எண்ணை அடையாளம் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில், சிறுமியை கடத்த முயன்றதாக சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்த ஓட்டுநர் ஹரிபாபுவை (24) கைது செய்தனர்.

இந்தச்சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் காவல் ஆணையர் மகேஷ்குமாரிடம் சிறுமியை அழைத்து பாராட்டச் சொன்னார். அதன் அடிப்படையில் சிறுமியை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். போலீஸாரையும் பாராட்டினார்.

இன்று ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சென்னை சிறுமியின் தீரத்தை குறிப்பிட்டு சிறுமியை பாராட்டினார். “குற்றவாளி தப்பிச் சென்றாலும் போலீஸார் உடனடியாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்துவிட்டனர். இந்த நிகழ்ச்சி குறித்து அறிந்தவுடன் நான் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலை அழைத்து சிறுமியை அழைத்து பாராட்டச் சொன்னேன்.

போலீஸாருக்கும் என் பாராட்டுதலை தெரிவித்தேன், காவல் ஆணையரும் சிறுமியை அழைத்து பாராட்டினார். இந்த அரசு பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் எப்போதும் உறுதியாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்”. என பாராட்டி பேசினார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/564948-chief-minister-praises-chennai-girl-who-cleverly-escaped-while-trying-to-abduct-in-auto.html