ஒரே நாளில் 14 ஆயிரம் இ-பாஸ்களுக்கு அனுமதி அளித்த சென்னை மாநகராட்சி – தினமணி

சென்னைச் செய்திகள்

ஒரே நாளில் 14 ஆயிரம் இ-பாஸ்களுக்கு அனுமதி அளித்த சென்னை மாநகராட்சி

சென்னை: இ-பாஸ் பெறுவதில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று நடைமுறை அமலுக்கு வந்த முதல் நாளில் சுமார் 14 ஆயிரம் இ-பாஸ்களுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. 

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பொதுமக்கள் இ-பாஸ் பெற இதுவரை இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 17-ம் தேதி திங்கள்கிழமை நடைமுறைக்கு வந்தது.

இந்த நடைமுறை அமலுக்கு வந்த திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 14,355 இ-பாஸ்களுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

இதில், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர இ-பாஸ் கோரி விண்ணப்பித்த 11,608 பேரும் உள்ளடங்குவர். அதே சமயம், இதர மாநிலங்களில் இருந்து சென்னைக்குள் வர 1072 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதத்தில் ஒரு நாளைக்கு 1500 பேருக்கு இதர மாவட்டங்களில் இருந்து சென்னை வர இ-பாஸ் வழங்கப்பட்டது, இதர மாநிலங்களிலிருந்து 150 – 200 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/aug/18/14355-e-passes-approved-in-a-day-by-chennai-corporation-after-relaxation-of-norms-3451715.html