சென்னை: தூசு தட்டும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த சில ஆண்டுகளாகவே இக்கட்டான சூழலில் இயங்கி வருகிறது. எரிபொருள் விலையேற்றம், உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, அதிகமான வரி, தேவைக் குறைவு, சந்தையில் போட்டி போன்ற பல்வேறு காரணங்களால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் போதிய அளவு வருவாய் ஈட்ட முடியாமல் தவித்து வந்தன. இதுபோன்ற சூழலில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல கொரோனா பிரச்சினை வந்தது. கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஏப்ரல் மாதம் முதலே வாகன விற்பனை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

ஊரடங்கால் ஒரு மாதத்தில் ஒரு காரைக் கூட விற்பனை செய்ய முடியாமல் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவித்தன. மாருதி சுஸுகி உள்ளிட்ட மிகப் பெரிய நிறுவனங்கள் கூட வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடிக்கு உள்ளாகின. இதுபோன்ற சூழலில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழில் நடவடிக்கைகள் சூடுபிடித்ததால் ஜூன் மாதத்தில் வாகன விற்பனை மீண்டு இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு பெரும்பாலானோர் வேலைக்குத் திரும்பியதால் வாகன விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய உத்வேகத்தில் உள்ளன.

நிலம் வாங்கப் போறீங்களா… கவலையே வேண்டாம்! அள்ளிக் கொடுக்கும் எஸ்பிஐ!

சென்னையில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் அனைவரையும் வேலைக்கு வர வைத்து முழு வீச்சில் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள ஒரகடம் பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தி அடுத்து வரும் பண்டிகை சீசனுக்கு வாகன உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பூந்தமல்லிக்கு அருகில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் இரண்டாவது ஷிஃப்ட் உற்பத்தியை தீவிரமாக நடத்தத் தொடங்கியுள்ளது. ராயல் என்ஃபீல்டு, டயம்லர் போன்ற நிறுவனங்களும் பேருந்துகள் ஏற்பாடு செய்து ஊழியர்களைப் பணிக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளன.

வீடு வாங்குறவங்களுக்கு சூப்பர் சான்ஸ்! குறைந்த வட்டியில் சலுகை!

எப்படியாவது வாகன உற்பத்தியை அதிகரித்து பண்டிகை சீசனில் நல்ல லாபத்தை ஈட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஊழியர்களைப் பொறுத்தவரையில், ஊரடங்கு காரணமாக வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்ததால் வருமானம் இல்லாமல் தவித்த நிலையில் தற்போது வேலைக்குத் திரும்பிய மகிழ்ச்சியில் உள்ளனர்.

Source: https://tamil.samayam.com/business/business-news/automobile-companies-in-chennai-back-on-track-after-lockdown-restrictions-lifted/articleshow/77891321.cms