சென்னை புறநகர் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்? – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க தளர்வுகளில் முக்கிய அம்சமாக, பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, சென்னை மாநகரிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து சேவை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்கபடவுள்ளது.

அத்துடன், சென்னை உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் சேவையும், மாநிலத்தின் பிற பகுதிகளில் பயணிகள் சிறப்பு ரயில்களும் திங்கள்கிழமை (செப்.7) முதல் இயக்கப்படவுள்ளன.

மெட்ரோ ரயில்கள் ரெடி… செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்னென்ன?

இந்த நிலையில், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று சென்னையில் புறநகர் ரயில் சேவையையும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் பகுதியளவு ரயில்களை இயக்கவும், அதன் பின்னர், ரயில்களில் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புறநகர் ரயில் சேவையை மீண்டும் தொடங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

சென்னை மெட்ரோ ரயிலில் எப்படி பயணிக்க வேண்டும்? பயணசீட்டு வழிமுறைகள் மாற்றம்…

ஆனால் இந்த தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. “சென்னையில் புறநகர் ரயில்களை மீண்டும் இயக்குவது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. புறநகர் ரயில்களை இயக்குவது தொடர்பான காலஅட்டவணையும் வெளியிடப்படவில்லை. ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்த பின்பே இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்” என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/suburban-train-transport-may-be-start-soon-in-chennai/articleshow/77950587.cms