நவீன இயந்திரங்கள் மூலம் மழைநீர் வடிகாலில் தூர்வாருவதில் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளும் சென்னை மாநகராட்சி – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

Published : 12 Sep 2020 07:10 am

Updated : 12 Sep 2020 07:10 am

 

Published : 12 Sep 2020 07:10 AM
Last Updated : 12 Sep 2020 07:10 AM

chennai-corporation
சென்னை பிராட்வே சாலையில் மழைநீர் வடிகாலில் படிந்துள்ள மண்ணை இயந்திரம் உறிஞ்ச ஏதுவாக கடப்பாறையால் பெயர்க்க முயலும் மாநகராட்சி இயந்திர பணியாளர்கள். படம்: ச.கார்த்திகேயன்

சென்னை

சென்னை மாநகரப் பகுதியில் தூர்வார வாங்கப்பட்ட நவீனதூர் உறிஞ்சு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை மாநகராட்சி எதிர்கொண்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 1,894 கிமீ நீளத்தில் 7 ஆயிரத்து 350மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக 3 லட்சத்து 22 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் தூர் வாரப்படுவது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் ரூ.18 கோடி செலவிடப்படுகிறது.

மழைநீர் வடிகாலில் ஆட்களைஇறக்குவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இது போன்ற சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, மாநகராட்சி சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.36 கோடியே 40 லட்சம் செலவில் 7 நவீன தூர் உறிஞ்சு இயந்திர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்களை வாங்குவதற்கு முன்பு, தொடர்புடைய நிறுவனத்தால் அந்த இயந்திரத்தின் செயல் விளக்கமும் காட்டப்பட்டது.

இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபரில்தொடங்க உள்ள பருவமழைக்குமுன்னதாக தற்போது மாநகரின் பல இடங்களில் அந்த இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால். பல இடங்களில் அந்த இயந்திரத்தை பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வதாக புகார் எழுந்துள்ளது.

வண்டல் நிரம்பியுள்ள மழைநீர் வடிகாலில் தண்ணீர் விட்டு கலக்கி, அந்த வண்டல் உறிஞ்சப்படும் என்றுகூறப்பட்ட நிலையில், நடைமுறையில், பல இடங்களில் அவ்வாறு இயந்திரத்தால் உறிஞ்ச முடியவில்லை. இயந்திரம் எளிதில் உறிஞ்ச ஏதுவாக அதை இயக்கும் பணியாளர்கள், கடப்பாறையால் மண்ணை கொத்தி, கிளறியே சோர்வடைந்து விடுகின்றனர். அப்படியே தூரை உறிஞ்சினாலும், வடிகாலில் மூடிகள் உள்ள பகுதிகளுக்கு கீழே மட்டுமேஉறிஞ்சுகிறது.

இரு ஆள்நுழைவு மூடிகளுக்கு இடையில் உள்ளே இருக்கும் மண்ணை இயந்திரத்தால் உறிஞ்ச முடியவில்லை என தூர் வாரும் பணியில், இயந்திரத்துக்கு உதவி செய்ய நியமிக்கப்பட்டுள்ள மாநகராட்சி களப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் இயந்திரங்களுக்கு அருகில் ஆட்கள் மூலமும் தூர் வாரப்பட்டு வருகிறது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/577728-chennai-corporation.html