பிக்பாஸ் வீட்டைபோல் மாறிய சென்னை, யாரும் தப்ப முடியாது! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை முழுவதும் 2 லட்சத்து 90 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள காரணத்தால், குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் பெரும்பாலானோரை மாவட்ட போலீசார் எளிதாகக் கண்டு பிடித்து விடுகின்றனர்.

சென்னையில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போலீசார் பொருத்திய இந்த கேமராக்களே இப்போதைய நேரத்தில் மக்களைக் கண்காணித்து வருகின்றன.

குறிப்பாக விபத்துகளை ஏற்படுத்தி விடுத்துத் தப்பி ஓடும் நபர்களைக் கண்டறிய சிசிடிவி கேமராக்கள்தான் முக்கிய துடுப்பு சீட்டாக உள்ளது.

இந்த சிசிடிவி கேமராக்கள் காரணமாகச் சமீபத்தில் கூட ஒரு விபத்து வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. சென்னை ஈசிஆரில் பிரகாஷ் என்ற 30 வயதுக்காரர், பைக்கில் சென்று கொண்டிருந்தபோது உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த விபத்தில் பிரகாஷ், தனது பைக்கிலிருந்து கீழே வழுக்கி விழுந்து உயிரிழந்துவிட்டார் என குடும்பமே நம்பிக் கொண்டிருந்தது.

ஆனால், போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிரகாஷ் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு கார் அவரை மோதியுள்ளது. இதன் காரணமாகவே பிரகாஷ் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து விபத்துக்குக் காரணமாக கார் ஓட்டுநரை போலீசார் கண்டறிந்து கைது செய்தனர்.

அதேவேளை இந்த சிசிடிவி கேமராக்கள் மட்டுமே குற்றவாளிகளைப் பிடிக்க போதுமான சாட்சிகளாக அமைந்துவிடாது என வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் கூறுகையில், “நீதிமன்றங்கள் சிசிடிவி காட்சிகளைக் கூடுதல் சாட்சிகளாக மட்டுமே எடுத்துக் கொள்ளும்” என்கிறார்.

அதேவேளை இதுபோன்ற சிசிடிவி ஆதாரங்களை வல்லுநர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தால், அதை நீதிமன்றங்கள் சாட்சியாக எடுத்துக் கொள்ளும் என்பதையும் வழக்கறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

கொரோனா வெறும் வைரஸ் அல்ல… தடுக்க ஒரே ஒரு வழிதான்

சட்ட ரீதியாக இதுபோன்ற நடவடிக்கைகள் வழக்கு விசாரணைக்குத் தேவைப்படுகிறது என்பது ஒருபுறம். அதேவேளைச் சென்னை போன்ற பெருநகரத்தில் போலீசார் அனைத்து இடங்களுக்குச் சென்று கண்காணிக்க வேண்டும் என்பது முடியாத காரியம். இந்த முடியாது என்ற சொல்லை இனி போலீசார் பயன்படுத்தத் தேவையில்லை என்ற சூழலையே இப்போது இந்த சிசிடிவி கேமராக்கள் உருவாக்கியுள்ளது.

இதன் காரணமாக மாவட்டத்தில் முக்கியச் சாலைகள் சற்று பாதுகாப்பானதாக மாறியுள்ளது என மக்கள் கருதுகின்றனர். இந்த சிசிடிவி கேமராக்கள் குறித்து சென்னை போலீஸ் கமிஷ்னர் மகேஷ் குமார் அகர்வால், “சிசிடிவி கேமராக்களை வைத்து மாவட்டத்தைக் கண்காணிக்கும் முறையை நான் தெற்கு சென்னை கமிஷ்னராக இருக்கும்போதிருந்தே பின்பற்றி வருகிறோம்” எனக் கூறுகிறார்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/city-has-3-lakh-cctv-which-helps-police-to-catch-convicts-easily/articleshow/78677641.cms