வாய் கிழியப் பேச்சு.. ஓட்டுப் போட வர்றதுல்லை.. மீண்டும் மானத்தை வாங்கிய சென்னை… வெறும் 59.4%தான்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 16 தொகுதிகளை உள்ளடக்க்கிய சென்னை மாவட்டத்தில் மிக குறைவாக 59.4% வாக்குகள் பதிவாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல்ல் இரவு 7 மணி வரை இடைவேளையில்லாமல் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொதுவாக பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் அமைதியான முறையில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. கடைசிநேரத்தில் சென்னையில் வட இந்தியர்களை வைத்து கள்ள ஓட்டுப் போடுவதாக புகார் எழுந்தது. தரமணியில் ஒரு வாக்குச் சாவடியையே அதிமுகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டுப் போடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

விறுவிறு வாக்குகள் பதிவு

திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் காலையில் இருந்தே மிக அதிக அளவிலான வாக்குகள் பதிவாகின. பொதுவாக பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப் பதிவு மிக மந்தமாக இருந்தது. கடுமையான வெயிலின் தாக்கம் மிக முக்கியமான காரணம். அதேநேரத்தில் நகர்ப்புற வாக்குச் சாவடிகளில்தான் கொரோனா கட்டுப்பாடுகள், சமூக இடைவெளிகள் பின்பற்றப்பட்டன. பெருபாலான கிராமப்புற வாக்குச் சாவடிகளில் எப்போதும் போலவே வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஒட்டுமொத்த வாக்குப் பதிவு

தமிழகத்தில் நேற்று மொத்தம் 71.79% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் தருமபுரி, திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 77%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி அதிரடி காட்டின. அதேநேரத்தில் 16 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட சென்னை மாவட்டத்தில் வெறும் 59.40% வாக்குகள்தான் பதிவாகி இருப்பதுதான் பெரும் அதிர்வலைகளாக இருக்கின்றன.

சென்னையில் படுமோசம்

பொதுவாக பிற மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தில் 6 அல்லது 7 தொகுதிகள் இடம்பெறும். இந்த மாவட்டங்களில் எல்லாம் 70% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஆனால் 16 தொகுதிகளைக் கொண்ட சென்னையில்தான் தமிழ்நாட்டிலேயே மிக குறைவான வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. சென்னையில் அதிகரித்து உள்ள கொரோனா அச்சம் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சோம்பேறித்தனம்

அதேநேரத்தில் சென்னை போன்ற பெருநகரவாசிகள் ஜனநாயகத் திருவிழாவான தேர்தல்களில் பங்கேற்காமல் ஒதுங்கி இருப்பது விவாதத்துக்குரியதாகவும் இருக்கிறது. உள்ளூர் முதல் உலக அரசியல் வரை விலாவாரியாக பேசுகிற இந்த பெருநகரமக்களுக்கு ஜனநாயகத்தின் மீது ஏன் அக்கறை இல்லாத சோம்பேறித்தனம் என்பது புரியவில்லை. தமிழகத்தின் கிராமங்களில் அலை அலையாக மக்கள் வாக்களித்திருப்பதை பார்க்க முடிகிறது.

கிராமங்களில் அக்கறை

தமிழ்நாட்டின் மிக மிக உட்கிராமம் வேடசந்தூர் தாலுகாவில் உள்ள எரியோடு பண்ணைப்பட்டி. இங்குள்ள ஒரே ஒரு வாக்குச் சாவடியில் மொத்தம் 903 வாக்குகள். இதில் பதிவான வாக்குகள் 764. அதாவது 84.5% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து வந்து வாக்களிக்க இயலாதவர்கள்தான் எஞ்சியவர்கள். அப்படி ஒரு சாதாரண கிராம மக்களுக்கு இந்த ஜனநாயக அமைப்பின் மீதான அக்கறையும் நம்பிக்கையும் பேரலையாக இருப்பதை வாக்குப் பதிவுகள் காட்டுகின்றன..

வெற்றுப் பேச்சுகள்

ஆனால் மெத்தப் படித்தவர்கள், மேதாவிகள், அரசியலின் ஆணிவேரையே அசைக்கக் கூடிய சிந்தனையாளர்கள், சமூகக் கட்டமைப்புகளையே தலைகீழாக புரட்டிப் போடக் கூடியவர்களாக காட்டிக் கொள்கிற வாய்ச்சவடால் ஜாம்பவான்கள் வசிக்கும் சென்னை பெருநகரம் அதுவும் 16 தொகுதிகளைக் கொண்ட சென்னை மாவட்டம் வெறும் 59.04% வாக்கு பதிவுகளைத்தான் பெற்றிருக்கிறது என்பது நிச்சயம் தமிழகத்தின் தலைநகரம் என்பதற்கு தலைகுனிவுதான் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது. வரும் காலங்களில் இந்த அவலத்தை மாற்றுவதற்கான ப்ணிகள் என்பது பிரதான அரசியல் கட்சிகளின் கைகளில்தான் இருக்கிறது!

Source: https://tamil.oneindia.com/news/chennai/tn-assembly-eelection-why-very-low-turnout-only-59-4-in-chennai-417182.html