‘கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும்.. இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது, ஏனென்றால்..’ சென்னை ஐகோர்ட் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட முடியாது என்றும் நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் இரண்டு பொநல வழக்குகளைத் தொடர்ந்திருந்தார். அதில் ஒன்றில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் அவர்கள் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதேபோல மற்றொரு பொதுநல வழக்கில் கோவை சுற்றுப்புறப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அங்கு, தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு பொதுநல வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிடக் குழுவில் விசாரணைக்கு வந்தது. அரசு கொள்கை முடிவுகளை எதிர்த்து பெரும்பாலும் விளம்பரத்துக்காகவே பொதுநல வழக்குகள் தொடரப்படுவதாகத் தெரிவித்தனர்.

மேலும், கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட முடியாது என்றும் நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறதாகவும் அவை நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டுமென விரும்புவதாகவும் அவர்கள் கூறினர்.

தமிழ்நாட்டில் கோவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர். தேவைப்பட்டால், நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், பூமிராஜ் தொடர்ந்து இரு பொதுநலவழக்குகளையும் முடித்து வைத்தனர்.

English summary
Madras high court said that they can’t order govt to provide compensation for all Corona deaths. Judges also pointed out that as a policy matter.

Source: https://tamil.oneindia.com/news/chennai/can-t-order-govt-to-provide-compensation-for-all-died-due-to-corona-says-madras-high-court-423361.html