புராதன கோயில்களை அரசு பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு – Zee Hindustan தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழக கோயில்கள் குறித்த ஒரு முக்கிய உத்தரவை இன்று சென்னை உயர் நீதிமன்றம் விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை அரசு பாதுகாக்க வெண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தன் உத்தரவில் தெரிவித்துள்ளது.  

முன்னதாக, தமிழகத்தில் (Tamil Nadu) உள்ள பழமையான கோயில்களின் பாதுகாப்பு தொடர்பாக, 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. சென்ற முறை நடந்த இந்த வழக்கு விசாரணையில், தமிழக அறநிலைத்துறை தனது அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.   

அறநிலைத் துறை சமர்ப்பித்த அறிக்கையில், தமிழகத்தில் அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் இருப்பதாகவும், அவற்றில் 8,450 கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழமைவாய்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டன. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயில்கள் புராதன கோயில்களாக கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் 32,935 கோயில்கள் எந்த சேதமும் இல்லாமல் நல்ல நிலையில் இருப்பதாகவும், 6,414 கோயில்களில் சிறிய அளவு சேதம் இருப்பதால், இங்கு சிறிய அளவிலான சீரமைப்புப் பணிகள் தேவைப்படுகின்றன என்றும், 530 கோயில்கள் பாதிக்கும் மேல் சேதமடைந்த நிலையிலும், 716 கோயில்கள் முழுதாக சிதிலமைடைந்த நிலையில் இருப்பதாகவும், இந்த கோயில்களுக்கு முழுமையான சீரமைப்பு தெவை என்றும் அறிக்கையில் கூறப்பட்டது. எந்த அளவில் சிதிலமடைந்திருந்தாலும், அவற்றை யுனெஸ்கோ விதிகளின்படி சீரமைக்க தெவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அறநிலையத்துறை தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணைக்குப் பிறகு இந்த நீதிபதிகள் அமர்வு தமிழக அரசுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கோயில்கள் தமிழகத்தின் தனி அடையாளம் என்றும், வரலாற்று சிறப்புமிக்க, தொன்மையான புராதன கோயில்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு விடுத்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

– தமிழகம் முழுவதிலும் உள்ள கோயில்களின் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்கள் மீட்கப்படவேண்டும். கோயில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் உடனடியாக வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும்.

– கோயில்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட வெண்டும்.

– பராமரிப்பு இன்றி இருக்கும் கோயில்களில் உடனடியாக அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமிக்கப்பட வேண்டும்.

– கோயில்களுக்கு சொந்தமான சிலைகள், நகைகள், பிற சொத்துக்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட வெண்டும். இவற்றின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட வெண்டும்.

ALSO READ: மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு

– கோயில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் அமைக்கப்பட்டு சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். 

– கோயில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். பரம்பரை அறங்காவலர்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை அளிக்கப்பட வெண்டும்.

– மத்திய கணக்குத் தணிக்கைக்கு கீழ் கோயில் கணக்கு வழக்குகளை கொண்டு வர வேண்டும். 

– சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். கோயில் சொத்துக்கள் (TN Temples), நிலங்களுக்கு சேதம் உண்டாக்கியவர்கள், சிலைகளைத் திருடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முறையான விதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கோயில்களுக்கு சொந்தமான நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். 

கோயில் பாதுகாப்பு தொடர்பாக இன்று உயர்நீதிமன்றத்தால் (Madras High Court) விதிக்கப்பட்டுள்ள அனைத்து உத்தரவுகளையும் தமிழக அரசு அடுத்த 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும் அது குறித்த அறிக்கையையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.   

இதற்கிடையில், சென்னையில் உள்ள வடபழனி கோயிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 5.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். இந்த கோயில் மட்டுமல்லாமல், அனைத்து கோயில்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் பணி நடைபெறும் என்று அவர் மேலும் கூறினார். 

ALSO READ: அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆதரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Source: https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hight-court-issues-ordres-to-tn-government-regarding-protection-of-ancient-tn-temples-364492