யோகி சாதனை எனும் பதிவில் சென்னை மருத்துவமனை புகைப்படம்.. உ.பி மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை என்ன ? – You Turn – YouTurn

சென்னைச் செய்திகள்

பரவிய செய்தி

உத்தரப் பிரதேசத்தில் வெறும் 12 மருத்துவக் கல்லூரிகளாக இருந்த எண்ணிக்கையை ஆட்சிக்கு வந்த நான்கே ஆண்டுகளில் அதை 48 ஆக உயர்த்தியது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு.

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கே.டி.ராகவன் தன் முகநூல் பக்கத்தில், சாதிக்கும் யோகி அரசு.” உத்தரப் பிரதேசத்தில் வெறும் 12 மருத்துவக் கல்லூரிகளாக இருந்த எண்ணிக்கையை ஆட்சிக்கு வந்த நான்கே ஆண்டுகளில் அதை 48 ஆக உயர்த்தியது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ” எனும் ஓர் பதிவை பகிர்ந்து இருந்தார்.

Advertisement

இந்த பதிவை வெளியிட்டது மீடியான் எனும் இணையதளத்தின் முகநூல் பக்கம். இந்த பதிவில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி தொடர்பாக பகிரப்பட்ட தகவலுக்கு தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள மருத்துவமனையின் புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

சென்னையின் பள்ளிக்கரனை பகுதியில் அமைந்து இருக்கும் காமாட்சி நினைவு மருத்துவமனையின் புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளனர். அந்த பகுதியில் பிரபலமான மருத்துவமனை என்பதால் பலரும் இது சென்னை மருத்துவமனை என பதிவிடத் துவங்கினர்.

Facebook link 

இந்நிலையில், ” இரண்டு நாட்களுக்கு முன்பு மீடியான் போஸ்டர் ஒன்று வெளியிட்டு இருந்தது. அதில் உத்திரப் பிரதேசத்தில் 12 ஆக இருந்த மருத்துவக் கல்லூரியின் எண்ணிக்கையை யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியேற்ற பிறகு 48 ஆக உயர்த்தினார் என்று வெளியிட்டிருந்தோம். செய்தி 100% உண்மை என்றாலும் அதில் பயன்படுத்திய மருத்துவமனையின் புகைப்படம் தவறானது என்று தெரிய வந்துள்ளது. நாங்கள் திரவிடியன் ஸ்டாக்ஸ்‌ (Dravidian Stocks) இல்லை என்பதாலும் தவறு செய்வது எங்கள் நோக்கம் இல்லை என்பதாலும், அந்த போஸ்டரை வடிவமைத்த தம்பியின் சார்பாக ஏற்பட்ட இந்த குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் ” எனப் பதிவை வெளியிட்ட மீடியான் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

உத்தரப் பிரதேச மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை : 

Advertisement

2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத்  உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 12 மருத்துவக் கல்லூரிகளாக இருந்த எண்ணிக்கை நான்கே ஆண்டுகளில் அதை 48 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு இருக்கும் தகவல் குறித்து தேடிப் பார்த்தோம்.

2017 மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை குறித்து மாநில வாரியாக லோக் சபாவில் அளிக்கப்பட்ட தகவலில், யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்பதற்கு முன்பாக 16 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 29 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் என மொத்தம் 45 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும், ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக 11 கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள் என்று பார்த்தால் கூட 16 கல்லூரிகள் இருந்துள்ளன.

2021 பிப்ரவரி மாதம் லோக் சபாவில் அளிக்கப்பட்ட தகவலில், உத்தரப் பிரதேசத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 31 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் என மொத்தம் 57 மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகள் என பார்த்தால் 10 கல்லூரிகள் உயர்ந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டத்திற்கும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டத்தில் உள்ளனர்.

” 2021 மே மாதம் ரவிக்குமார் என்பவர் பெற்ற ஆர்.டி.ஐ தகவலில்,  Centrally Sponsored Scheme (CSS) எனும் திட்டத்தின் கீழ் மாநிலங்களில் பல மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளை பெறுவது உத்தரப் பிரதேச மாநிலமே. உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 27 , ராஜஸ்தானிற்கு 23 , மத்தியப் பிரதேசத்திற்கு 14, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்திற்கு தலா 11 மருத்துவக் கல்லூரிகளை பெறுகின்றன. இந்த கல்லூரிகள் அரசு மாவட்டம் அல்லது பரிந்துரைக்கப்படும் மருத்துவமனைகளுடன் இணைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், புதிய மருத்துவக் கல்லூரிகளின் செலவில் 60 சதவீதத்தை ஒன்றிய அரசே ஏற்கும் ” என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

2021 ஜூலை மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மருத்துவக் கல்வித் துறையின் செய்தித்தொடர்பாளர் கூறியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாதனை என பகிரப்பட்ட பதிவில் இடம்பெற்ற மருத்துவமனையின் புகைப்படம் சென்னை காமாட்சி நினைவு மருத்துவமனையின் புகைப்படம்.

அடுத்ததாக, யோகி ஆதித்யநாத் உ.பி மாநில மாநில முதல்வராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பாக 12 மருத்துவக் கல்லூரிகள் இருந்ததாகக் கூறுவது தவறான தகவல். 2017 மார்ச் வரையிலும் 16 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்துள்ளன. 2021 பிப்ரவரி வரை 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்துள்ளன. நான்கே ஆண்டுகளில் 12 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 48 ஆக உயர்த்தியதாக கூறுவது முரண்பாடான தகவலாக உள்ளது.

Centrally Sponsored Scheme (CSS) எனும் திட்டத்தின் கீழ் 60% நிதியுடன் உத்தரப் பிரதேசம் 27 மருத்துவக் கல்லூரிகளை பெறுகிறது. இதில், 9 மருத்துவக் கல்லூரிகள் இம்மாதம் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.

image

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

ஆதாரம்

Source: https://youturn.in/factcheck/up-yogi-adithyanath-medical-college.html