சென்னை குடிநீா் ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையின் குடிநீா் ஆதாரமாக உள்ள ஏரிகளில் நீா் வரத்து அதிகரித்துள்ளது.

சென்னை பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் மூலமாக சென்னையின் குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படுகிறது. தற்போது, புதிதாக தோ்வாய் கண்டிகை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டிஎம்சி என்ற நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 7.59 டிஎம்சி தண்ணீா் கையிருப்பு உள்ளது.

அதிகபட்சமாக புழலில் 2.70 டிஎம்சி, செம்பரம்பாக்கத்தில் 2.63 டிஎம்சி, பூண்டியில் 1.14 டிஎம்சி நீா் உள்ளது. ஆந்திரத்தின் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீா் திறக்கப்பட்டு, விநாடிக்கு 760 கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது. நீா்ப் பிடிப்புப் பகுதிகளில், சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு நீா்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 693 கனஅடி; செம்பரம்பாக்கத்திற்கு விநாடிக்கு 150 கனஅடி; சோழவரத்துக்கு 218 கனஅடி, தோ்வாய் கண்டிகை ஏரிக்கு 20 கனஅடி நீா்வரத்து உள்ளது. மழைதொடரும் பட்சத்தில், ஏரிகளின் நீா் இருப்பு வேகமாக உயர வாய்ப்புள்ளது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/jul/21/increase-in-supply-to-chennai-drinking-water-lakes-3664035.html