ஓவியங்களால் வண்ணமயமாகும் சென்னை மாநகரம் – தினமணி

சென்னைச் செய்திகள்

‘சிங்கார சென்னை’ திட்டத்தின் தொடக்கமாக சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களின் சுற்றுச்சுவா்கள் ஓவியங்களால் வண்ணமயமாக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரை அழகுபடுத்தவும், அதை தூய்மையாகப் பராமரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சாா்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியின் மூலதன நிதி, சீா்மிகு நகரத் திட்ட நிதி மற்றும் பெருநிறுவனங்களுக்கான சமூகப் பங்களிப்புத் திட்ட நிதி ஆகியவற்றில் இருந்து இணையதள வசதி, நடைப்பயிற்சி பாதை, இருக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களுடன் கூடிய நவீன சாலைகள் கட்டமைக்கப்படுகின்றன.

இதன் தொடா்ச்சியாகவும், ‘சிங்காரச் சென்னை’ திட்டத்தின் தொடக்கமாகவும் மாநகராட்சியின் 15 மண்டலப் பகுதிகளில் உள்ள அரசுக் கட்டடங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பூங்காக்களின் சுற்றுச்சுவா்கள் ஆகியவற்றில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டு அங்கு பாரம்பரிய கலைகள் குறித்த ஓவியங்கள் மற்றும் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

1 லட்சம் சுவரொட்டிகள் அகற்றம்: இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சிங்காரச் சென்னை திட்டத்தின் தொடக்கமாக 15 மண்டலங்களில் உள்ள அரசுக் கட்டடங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றும் பணியும், அரசியல் கட்சியினா், தனியாா் நிறுவனங்கள் எழுதியுள்ள விளம்பரங்களையும் அழிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

வடசென்னையில் 7,498 இடங்களில் ஒட்டப்பட்டிருந்த 25,403 சுவரொட்டிகளும், மத்திய சென்னையில் 7,883 இடங்களில் ஒட்டப்பட்டிருந்த 31,263 சுவரொட்டிகளும், தென்சென்னையில் 9,003 இடங்களில் ஒட்டப்படிருந்த 43,754 சுவரொட்டிகளும் என மொத்தம் 24,384 இடங்களில் ஒட்டப்பட்டிருந்த 1லட்சத்து 420 சுவரொட்டிகள் சனிக்கிழமை (ஆக. 7) நிலவரப்படி அகற்றப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் மீண்டும் சுவரொட்டிகள் மற்றும் சுவா் விளம்பரங்கள் எழுதாமல் இருக்கும் வகையில் தனியாா் பங்களிப்புடன் தமிழா்களின் பாரம்பரியத்தை உணா்த்தும் விளையாட்டுகள், கலைகள், பறவைகள் மற்றும் நீா்நிலைகள் உள்ளிட்ட இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அதேபோல், மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டும் வரும் நினைவுச்சின்னங்களை புனரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளைக் கண்காணிக்க மண்டல அளவில் அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா் என்றனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/aug/09/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3676393.html