சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் வெற்றிவேல் வீட்டில் ரூ.11.8 லட்சம் பறிமுதல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.11.8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை,

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும்அவருடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த10-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான சொத்துஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள், வங்கி கணக்கு ஆவணங்கள், ரூ.2 கோடி வைப்பு நிதி ஆவணம், வங்கி லாக்கர் சாவிகள், ரூ.13 லட்சம் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சோதனையில் கைப்பற்றிய ஆவணங்களை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சென்னை எம்ஜிஆர் நகரில் வசிக்கும் அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 5 பேர் நேற்று மாலை சோதனை நடத்தினர்.

இந்நிலையில், விடிய விடிய நடைபெற்ற சோதனை இன்று காலை 6.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த சோதனையில் 11.80 லட்சம் ரூபாய் பணமும், அதேபோல காண்ட்ராக்ட் முறைகேடுகள் தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு சம்மன் கொடுத்து மேலும் முழுமையாக வெற்றிவேலிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/08/17085441/Rs-118-lakh-confiscated-from-Chennai-Corporation-contractor.vpf