சென்னை ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள்? அதிகரிக்கும் கொரோனாவால் அரசு அதிரடி முடிவு! பரபர தகவல் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் சில இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது மாநிலத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்தது.

இதன் காரணமாக அப்போது நிலைமையைக் கட்டுப்படுத்த முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது.

காரில் ஏறும் வரை (மண)மகளுக்கு குடைபிடித்த டி.டி.வி.தினகரன். மகளதிகாரம் என டிவிட்டரில் டிரெண்டிங்! காரில் ஏறும் வரை (மண)மகளுக்கு குடைபிடித்த டி.டி.வி.தினகரன். மகளதிகாரம் என டிவிட்டரில் டிரெண்டிங்!

கொரோனா 2ஆம் அலை

முதல் அலையைப் போலவே இரண்டாம் அலையிலும் தலைநகர் சென்னை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. தினசரி வைரஸ் 3000ஐ கடந்தது. இதனால் தலைநகரிலுள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின. இன்னும் சொல்லப்போனால், சென்னையிலுள்ள சில மருத்துவமனைகளில் நோயாளிகள் பல மணி நேரம் வரை ஆம்புலன்சிலேயே காத்திருக்க வேண்டிய அவல சூழலும் ஏற்பட்டது.

ககன்தீப் சிங் பேடி

இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினர் ஆணையர் ககன்தீப் சிங் பேடி. கொரோனா அறிகுறிகளுடன் வருவோருக்கு பாசிட்டிவ் என உறுதியாகும் முன்னரே கொரோனா மருத்து கிட்டை அளிப்பது, நகரை மண்டலம் வாரியாக பிரித்துக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகளால் சென்னையில் வேகமாக வைரஸ் கட்டுக்குள் வந்தது. குறிப்பாக மருத்துவமனைகளில் படுக்கைகளின் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு காரிலேயே வைத்து ஆக்சிஜன் அளிக்கும் கார் ஆம்புலன்ஸ் திட்டம் அமல்படுத்தினார். இதைப் பிரதமர் மோடியே பாராட்டினார்.

குறைந்தது கொரோனா

இப்படித் தொடர்ந்து எடுக்கப்பட்ட பலகட்ட முயற்சிகள் காரணமாக வைரஸ் பாதிப்பு ஆயிரங்களில் இருந்து விரைவில் நூறுக் கணக்கில் குறைந்தது. கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தான் கடைசியாகத் தலைநகரில் வைரஸ் பாதிப்பு 200ஐ கடந்திருந்தது. அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு 170- 180 என்ற விகிதத்திலேயே இருந்து வந்தது. கூடுதல் தளர்வுகள், பள்ளிகள் திறப்ப ஆகியவை இருந்தாலும் கூட வைரஸ் மிக மோசமாக அதிகரிக்கவில்லை.

மீண்டும் ஷாக்

ஆனால், கடந்த சில நாட்களாக இந்த நிலை மெல்ல மாறி வருகிறது. நேற்று முன்தினம் தலைநகர் சென்னையில் வைரஸ் பாதிப்பு மீண்டும் 200ஐ கடந்தது. சென்னையில் நேற்று முன்தினம் 212 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. நேற்று இது மேலும் அதிகரித்து 226 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாகப் பல வாரங்கள் ஒன்றுக்குக் குறைவாகவே இருந்த கொரோனா டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட், நேற்று 1.1ஆக அதிகரித்துள்ளது.

3ஆம் அலை?

தலைநகரில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இது 3ஆம் அலையின் தொடக்கமாக என்றும் கூட சிலர் அஞ்சுகின்றனர். இருப்பினும், திரையரங்கு, பள்ளிகள் ஆகியவை திறக்கப்பட்டதாலேயே வைரஸ் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாகவும் இது அச்சப்படும் அளவுக்கு உயரவில்லை என்றும் சுகாதாரத் துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

கூடுதல் கட்டுப்பாடுகள்?

அதேநேரம் இரண்டாம் அலையைப் போல நிலைமை மோசமாகக் கூடாது என்பதிலும் சென்னை மாநகராட்சி உறுதியாக உள்ளது. இதனால் இன்னும் சில நாட்கள் பார்த்துவிட்டு, வைரஸ் பாதிப்பு தலைநகரில் தொடர்ந்து அதிகரித்தால், தி.நகர், காசிமேடு மீன் அங்காடி உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் மீண்டும் தீவிர கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக நேற்று கோவை மாவட்டத்திற்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி விழிப்புணர்வு

மேலும், மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேக்சின் போடப்பட்ட போதிலும், ஒரு சில பகுதிகளில் வேக்சின் குறித்த அச்சம் பொதுமக்களிடையே இன்னும்கூட உள்ளது. வேக்சின் போடாத மக்களின் உடல்களில் வைரஸ் உருமாறும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதால் வேக்சின் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் சென்னை மாநகாட்சி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Chennai Corporation to announce new lockdown restrictions. Coronavirus latest in Chennai

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-plans-to-announce-additional-restrictions-amid-corona-surge-433090.html