தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: பஸ், ரயில்களில் கூட்டம் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் கடைகளில் கடைசி கட்ட விற்பனை பரபரப்பாக நடந்து வருகிறது. பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதன்காரணமாக இன்று காலை முதல் தீபாவளி இறுதி ஷாப்பிங்கில் மக்கள் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னையை பொறுத்தவரை அதே நிலை தான் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் நல்ல குளிர்ச்சியான கிளைமேட் காணப்பட்டது. அது மட்டுமல்லாமல் மக்களை குளிர்விக்கும் வகையில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முக்கிய வணிக பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக சென்னை மட்டுமல்லாமல் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், பக்கத்து மாவட்டமான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் துணிகள், பாத்திரங்கள், நகைகள் உள்ளிட்ட ெபாருட்களை வாங்க சென்னைக்கு படையெடுத்து இருந்தனர். இதனால் இன்று அதிகாலை முதலே சென்னை முக்கிய வணிக பகுதிகளான தி.நகர் உஸ்மான் சாலை, பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனால், ஒரு தெருவை கடக்கவே சில மணி நேரம் ஆனது. அதே போல சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்ற வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது. மக்கள் பலர் மின்சார ரயில்களில் பொருட்களை வாங்க வந்ததால் காலையில் இருந்து மின்சார ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டத்தை சமாளிக்கும் வகையில், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

போலீசார் தடுப்புகளை அமைத்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை மேலும் தமிழகம் முழுவதும் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்புக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம், பிராட்வே, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

சுவிட் கடைகளில் தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை வாங்க ஆர்டர் கொடுக்க பலர் காலையில் இருந்தே வந்த வண்ணம் இருந்தனர். இதனால், அந்த கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஜார் வீதிகளில் நாளை, நாளை மறுநாள் மேலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் நாளை முதல் தங்கள் பயணத்தை தொடங்க உள்ளனர். ஏனென்றால் நாளை மறுநாள் சனிக்கிழமை, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்று வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயணத்தை தொடர திட்டமிட்டுள்ளனர். இதனால், நாளை மாலை முதல் சென்னை எழும்பூர், சென்ட்ரல் உளளிட்ட ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோத வாய்ப்புள்ளது.

அதே போல தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கும் கூட்டம் அதிகரித்து காண வாய்ப்புள்ளது. சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று  வர முடிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. இதே போல  கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்களிலும் டிக்கெட் விற்று தீர்ந்துள்ளது.

காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது. தீபாவளியை கொண்டாடும் வகையில் சென்னையில் இருந்து மட்டும் இந்த வார இறுதியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்களில் இடம் இல்லாத நிலையில் ஆம்னி பஸ் மூலம் பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பஸ் கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800 வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2,300 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

கோவைக்கு வழக்கமாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 3000 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக 1400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.3500, ரூ.4000 வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஆம்னி பஸ் கட்டணம் மூன்று மடங்கு உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MDgxODPSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgwODE4My9hbXA?oc=5