அக்.15க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை : சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு! – Kalaignar Seithigal

சென்னைச் செய்திகள்

2021 -22ஆம் ஆண்டிற்கான சொத்து வரியை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் செலுத்தினால் ரூ. 5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், “2021 – 22ஆம் நிதியாண்டில் முதல் அரையாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்த் துறை மூலமாகச் சொத்து வரி ரூ.375.59 கோடி மற்றும் தொழில் வரியாக ரூ.225.13 கோடி என மொத்தம் ரூ.600.72 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 நிதி ஆண்டுகளில் முதல் அரையாண்டு சொத்துவரி வசூலினை ஒப்பிடும்போது சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிதி ஆண்டினை தவிர்த்து, இந்த நிதி ஆண்டில் அதிகபட்சமாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன்படி, இரண்டாம் அரையாண்டின் முதல் 15 தினங்களுக்குள் அதாவது 1.10.2012 முதல் 15.10.2021க்குள் செலுத்தி, சொத்துவரியில் ஊக்கத் தொகையாக ஐந்து சதவீதம், அதிகபட்சமாக ரூ. 5,000 வரை பெற்று பயனடையலாம்.

சொத்துவரியினை 15ஆம் தேதிக்குப் பிறகு செலுத்தும்பட்சத்தில், செலுத்தவேண்டிய தொகையுடன் ஆண்டுக்கு இரண்டு சதவீதம் தனிவட்டி சேர்த்துச் செலுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/10/04/chennai-corporation-announces-tax-incentive-if-paid-by-oct-15