குற்றவாளிகள் கண்காணிப்பு.. ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.. சென்னை போலீஸ் கமி‌ஷனர் பளீச்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்!தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்!

சென்னையில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போர் நினைவுச் சின்னம் அருகில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மக்கள் கூட்டம்

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- தீபாவளியை பண்டிகை நெருங்கி வருவதால் முக்கியமான கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை கண்காணித்து குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம்.

கண்காணிப்பு பணிகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மாநகர் முழுவதும் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மற்றும் டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம். இதுதவிர ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குற்றச்செயல்கள் தடுக்கப்படும்

இதன் மூலம் குற்றச்செயல்கள் தடுக்கப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் உடனுக்குடன் பிடி படுவார்கள். குற்றவாளிகளை அடையாளம் காணும் ‘பேஸ் டிடெக்‌ஷன் சாப்ட்வேர்’ மூலம் சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்கள் இதற்கு மேலும் அத்துமீறினால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்

கொரோனா பரவலை தடுக்க அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சென்னை உள்ள பெரிய கடைகளில் மாஸ்க் அணிந்த மக்களை மட்டுமே அனுமதிக்கும்படி கூறியுள்ளோம். இதனை மீறும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

English summary
7,800 criminals have been identified in Chennai. Chennai Metropolitan Police Commissioner Shankar Jiwal said they were closely monitoring their activities

Source: https://tamil.oneindia.com/news/chennai/7-800-criminals-have-been-identified-in-chennai-says-police-commissioner-sankar-jiwal-436804.html