சாலையில் பள்ளம் .. சென்னை விபத்துக்கு தனியார் டெலிகாம் தான் காரணம்.. நெடுஞ்சாலைத்துறை புகார் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் பள்ளம் காரணமாக இளைஞர் தடுக்கி விழுந்து பேருந்தில் சிக்கி உயிரிழந்தார். இறப்புக்கு காரணமான பள்ளத்தை நெடுஞ்சாலைதுறை தற்காலிகமாக கற்களை போட்டு மூடியது. ஆனால் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையில் பள்ளம் தோண்டி விபத்துக்கு காரணமாக இருந்ததாக தனியார் டெலிகாம் நிறுவனம் மீது நெடுஞ்சாலைத்துறை புகார் தெரிவித்துள்ளது.

சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடபழனி நோக்கி மாநகர அரசு பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சின்னமலை வழியாக நேற்று காலை 8.40 மணியளவில் சென்றது . அப்போது அதே வழியாக இரு சக்கர வாகனத்தில் ராமாபுரத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் (31) இளைஞர் (ஐ.டி ஊழியர் ) வந்து கொண்டிருந்தார்.

வேலைக்கு சென்று கொண்டிருந்த முகமது யூனுஸ் சின்னமலை பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, தனியார் விடுதிக்கு எதிரே சாலையில் உள்ள மழை நீர் தேங்கி நின்றது.

திருமணமாகி வெறும் 4 நாள்..! மறுவீடு சென்ற போது விபத்து! துடிதுடித்து உயிரிழந்த புதுமணத் தம்பதி!திருமணமாகி வெறும் 4 நாள்..! மறுவீடு சென்ற போது விபத்து! துடிதுடித்து உயிரிழந்த புதுமணத் தம்பதி!

அரசு பேருந்து

அதில் இருந்த பள்ளத்தில் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறியுள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்துக்கு முன்பாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதினார்

உயிரிழப்பு

அதில் விபத்து ஏற்பட்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த முகமது யூனுஸ்சின் தலையில் பேருந்தின் பின் சக்கரம் ஏறியுள்ளது. இதனால் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து டிரைவர் தேவராஜ் கைது செய்யப்பட்டார்.

என்ன நடந்தது

இதனிடையே சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. சாலையில் இருந்த பள்ளம் மற்றும் மழைநீர் காரணமாக நிலை தடுமாறி பேருந்தின் இடையே சிக்கி சம்பவ இடத்தில் முகமது யூனுஸ் உயிரிழந்தது உறுதியானது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வைரலான நிலையில், சாலைகளின் தரம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர்.

மாநகராட்சி அதிரடி

சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடி சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதனிடையே போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிர் பலி வாங்கிய பள்ளத்தை உடனடியாக ஏன் சீர் செய்யவில்லை என்று நெடுஞ்சாலைத்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இந்த நோட்டீசை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவசரமாக விபத்து நடந்த பள்ளத்தை சரி செய்தனர். இளைஞரின் உயிரை பறித்த சாலையில் இருந்த பள்ளத்தை கற்களை போட்டு அவசரமாக மூடி சரி செய்யப்பட்ட நிலையில், மழை காரணமாக மீண்டும் பள்ளம் ஏற்பட்டது.

எமனாகும் பள்ளம்

இந்நிலையில் அண்ணா சாலையில் குறிப்பிட்ட பள்ளம் தோண்டி விபத்துக்கு காரணமாக இருந்ததாக தனியார் டெலிகாம் நிறுவனம் மீது நெடுஞ்சாலைத்துறை புகார் தெரிவித்துள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனம் கடந்த மாதம் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை பள்ளம் தோண்டி கேபிள் பதிக்க அனுமதி வாங்கிவிட்டு அந்த அனுமதி காலம் முடிந்த பின்பும், சாலையில் பள்ளம் தோண்டியதாகவும், அந்த பள்ளத்தை சரியாக திரும்ப சரிசெய்யவில்லை என தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் ஹரிபாபு என்பவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைதுறை புகார் ஒருபக்கம் எனில், இருசக்கர வாகனத்தில்செல்வோர் திடீர் பள்ளத்தில் நிலைகுலைந்து விபத்தில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அரசு உடனே இந்த விஷயத்தில் சாலை அமைக்கும் ஒப்பந்ததார்களுக்கு பிறப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

கசப்பான உண்மை

பல லட்சம் பேர் தினமும் பயன்படுத்தும் சாலை மோசமான தரத்தில் இருந்தால் அதை சரி செய்ய வேண்டியது நெடுஞ்சாலை துறை பொறுப்பு? எனவே விபத்து நடந்த இடத்தில் மட்டுமின்றி விபத்து நடக்க வாய்ப்பு இடங்களை கண்டறிந்து நிரந்தரமாக பள்ளங்களை சரிசெய்து சாலையை தரமானதாக மாற்ற வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே சென்னையில் மாதவரம் பால்பண்ணை காலணி பகுதியில் சாலைகளில் உள்ள பள்ளத்தை மூடும் பணியினை நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகிறது. சென்னையின் பல்வேறு இடங்களிலும் சாலைகளில்உள்ள பள்ளங்களை சரி செய்யும் நடவடிக்கையில் நெடுஞ்சாலைதுறை இறங்கி உள்ளது. ஒரு உயிர் போன பின்னர்தான் சாலைகள் சீரமைக்கும் பணிகளில் அக்கறை காட்டப்படுகிறது என்பது கசப்பான உண்மை.

English summary
Anna Salai, where the incident happened is maintained by the TamilNadu State Highway department. Patch work has been carried out. சாலையில் பள்ளம் தோண்டி விபத்துக்கு காரணமாக இருந்ததாக தனியார் டெலிகாம் நிறுவனம் மீது நெடுஞ்சாலைத்துறை புகார் தெரிவித்துள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/private-telecom-was-responsible-for-the-chennai-accident-highway-department-437841.html