தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்த மழை: மேகங்களால் வெள்ள பாதிப்பிலிருந்து தப்பிய சென்னை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் உருவான மழை மேகங்கள், தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் சென்னை மாநகரம் வெள்ளப் பாதிப்பிலிருந்து தப்பியது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 17, 18-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிக மழைநீர் தேங்கும் இடங்களான திரு.வி.க.நகர் தொகுதி புளியந்தோப்பு, பட்டாளம், கொளத்தூர் தொகுதி ஜவகர் நகர், பெரம்பூர் தொகுதி வியாசர்பாடி, முத்தமிழ் நகர், சோழிங்கநல்லூர் தொகுதி செம்மஞ்சேரி உள்ளிட்ட இடங்களில், அதிக திறன் கொண்ட 689 நீர்இறைக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

மேலும், வெள்ளம் சூழ்ந்தால் மக்களை மீட்க ஏதுவாக, கோட்டூர்புரம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 48 மீன்பிடிப் படகுகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

எனினும், 17-ம் தேதி இரவும், 18-ம் தேதி காலையிலும் குறிப்பிடும்படியாக கனமழை பெய்யவில்லை. பின்னர், சென்னைக்கு அறிவித்திருந்த ரெட் அலர்ட்-டை சென்னை வானிலை ஆய்வு மையம் திரும்பப்பெற்றது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வட தமிழக கரையை நெருங்கும்போது மழை மேகங்கள் அதிக அளவில் குவிந்திருந்தன.

அவை சென்னைக்கு அருகே வரும் என்று கணிக்கப்பட்டு இருந்ததால், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வழங்கப்பட்டு இருந்தது.

திருப்பதியில் வெள்ளப் பெருக்கு

இதனிடையே, வானிலை மாற்றம் காரணமாக மழை மேகங்கள், தெற்கு ஆந்திர மாநிலப் பகுதிக்கு சென்றுவிட்டன. அங்கு அனந்த்பூர் மாவட்டம் நம்புளிபுளிகுன்டாவில் 24 செ.மீ., ஒய்எஸ்ஆர் மாவட்டம் சம்பல்பூர், ராயச்சோட்டி, வேம்பள்ளியில் தலா 18 செ.மீ. மழை கொட்டித்தீர்த்துள்ளது. திருப்பதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கடந்த 7-ம் தேதி சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ., நுங்கம்பாக்கம், அம்பத்தூரில் தலா 21 செ.மீ. மழை பெய்திருந்தது. அதேநேரம், பெரம்பூரில் 14 செ.மீ. என பல இடங்களில் குறைவாக மழை பெய்திருந்தது.

ஏற்கெனவே கணித்தபடி மழை மேகம் 17-ம் தேதி இரவு சென்னைக்கு வந்திருந்தால், சென்னை மாநகரின் பெரும்பாலான இடங்களில் பரவலாக 24 செ.மீ. அளவுக்கு மழை பெய்திருக்க வாய்ப்பிருந்தது. அந்த நிகழ்வு நடந்திருந்தால் சென்னை மாநகரமே இன்று மிதந்திருக்கும். கடந்த 7-ம் தேதியைவிட பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும்.

மழை மேகங்கள் ஆந்திரா நோக்கி நகர்ந்ததால், வெள்ளப் பாதிப்பிலிருந்து சென்னை மாநகரம் தப்பியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கெனவே கணித்தபடி மழை மேகம் வந்திருந்தால், பெரும்பாலான இடங்களில் 24 செ.மீ. மழை பெய்து, சென்னை மாநகரமே மிதந்திருக்கும். மேலும், கடந்த 7-ம் தேதியைவிட பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/739015-chennai-survives-floods.html