உமா ஆனந்தனின் மாம்பல வெற்றி.. பாஜக ஓவரா பெருமைப்பட ஒன்னுமே இல்லை.. மேட்டரே இதுதானாம்..! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக உண்மையிலேயே 3வது கட்சியாக உருவெடுத்துள்ளதா? உமா ஆனந்தன் வெற்றியால் சென்னையிலும் பாஜக காலூன்ற ஆரம்பித்துவிட்டதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த முறை பாஜக தனித்து களமிறங்கியதுமே நிறைய சந்தேகங்கள் எழுந்தன.. ஏற்கனவே திமுக கூட்டணி பலத்துடன் களமிறங்குகிறது..

ஆனால் அதிமுகவோ தனித்து போட்டியிடுகிறது.. பாமக, நாம் தமிழர், மநீம, அமமுக கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது.
இதைதவிர தேர்தலில் சீட் கிடைக்காதவர்களும் தனித்து போட்டியிடுகிறார்கள்..

பழுக்கவில்லை மாம்பழம்.. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமே 125 பேர்தான் வெற்றி!பழுக்கவில்லை மாம்பழம்.. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமே 125 பேர்தான் வெற்றி!

போட்டி

இதைதவிர ஏராளமான சுயேட்சைகளும் இந்த முறை தனித்து போட்டியிட்டனர். இப்படி மொத்த பேரும் சேர்ந்து ஓட்டுக்களை பிரிக்கவிருக்கும் சூழலில் பாஜக எந்த அளவுக்கு வெற்றியை ஈட்டும் என்ற சந்தேகம் எழுந்தது. இப்போது குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்று, அனைத்து தமிழக கட்சிகளுக்கும் இன்ப அதிர்ச்சி தந்துள்ளது.

கன்னியாகுமரி

21 வருடங்களுக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் மீண்டும் தடம் பதித்துள்ளது… 242பேரூராட்சி வார்டுகளையும், 56 நகராட்சி வார்டுகளையும், 22 மாநகராட்சி வார்டுகளையும் கைப்பற்றி, 3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.. சென்னை மாநகராட்சியில், 134வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்… கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் பேரூராட்சியில் மொத்தம் உள்ள, 15 வார்டுகளில், 12ல் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சியின், 86வது வார்டு, நாகர்கோவில் மாநகராட்சி 9 வார்டு, திருப்பூர் மாநகராட்சியின் 56வது வார்டு, சென்னையில் துறைமுகம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஆறு வார்டுகளில், பாஜக 2வது இடத்தை பிடித்தது.. சுருக்கமாக சொன்னால், சென்னை, கோவை உட்பட முக்கிய மாநகராட்சிகளின் பல வார்டுகளில் அதிமுகவையே பின்னுக்கு தள்ளி 2வது இடத்தையும் பிடித்துள்ளது. இதையடுத்து, விமர்சனங்களை தகர்த்தெறிந்துள்ளது.. இது பாஜக தரப்பினருக்கு புது தெம்பையே ஏற்படுத்தி வருகிறது.

உமா ஆனந்தன்

இந்நிலையில், பாஜக கோவையை போலவே சென்னையிலும் வளர்ந்துள்ளதா? அல்லது இதே வெற்றி அடுத்தடுத்த தேர்தல்களிலும் கிடைக்குமா? முக்கியமாக சென்னையில் உமா ஆனந்தனின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற பல கேள்விகளை சில அரசியல் நோக்கர்களிடம் நாம் முன்வைத்தோம். அவர்கள் சொன்ன கருத்துக்கள் இவைதான்:

மாநகராட்சி

“கூட்டணியிடம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலா, 30 சதவீத இடங்களை ஒதுக்குமாறு பாஜக கேட்டது, ஆனால், 10 சதவீத இடங்கள்தான் வழங்குவோம் என்று அதிமுக மேலிடம் கறார் காட்டவும்தான், வேறு வழியில்லாமல் தனித்து போட்டியிட்டது.. இந்த தேர்தலில் ஓரளவு வாக்குசதவீதத்தை பெற்று விட்டால், அதுவரப்போகும் எம்பி தேர்தலுக்கு உதவியாக இருக்கும் என்று மேலிடம் கணக்கு போட்டது.. காரணம், கோவை, மதுரையில் தங்களுக்கான ஆதரவு ஓரளவு இருப்பதாக கடைசிவரை அண்ணாமலை நம்பினார்.. அவர் எதிர்பார்த்தபடியே கோவை, சென்னையில் பெரும்பான்மையான வெற்றி கிடைத்து உள்ளது.

அண்ணாமலை

இதில் கோவை, கன்னியாகுமரியை பொறுத்தவரை, அவர்களின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான்,.. ஆனால், தனித்து போட்டி என்றதுமே, பாஜகவில் வேட்பாளர்களுக்கே ஆட்கள் பஞ்சம் என்பது போல சோஷியல் மீடியாவில் மீம்ஸ்கள் எல்லாம் வெளிவந்தன.. அத்தனை வேட்பாளர்களுக்கு உங்கள் கட்சியில் உறுப்பினர்கள் இருக்கிறார்களா? என்று நேரடியாகவே சிலர் கேலி செய்திருந்தனர்.. ஆனால், நகர்ப்புற வார்டுகள் முழுமைக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதை பார்த்து மற்ற கட்சிகள் வாயடைத்து போயின.. அதேபோல தேர்தல் பொறுப்பாளர்களும் சிறப்பாகவே தங்கள் பணியினை செய்தனர் என்பதையும் மறுக்க முடியாது.. பொன்.ராதா சொன்னதுபோல், பாஜக தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது என்பதையும் ஓரளவு ஏற்கவே செய்யலாம்.

வெற்றி

ஆனால், சென்னை வெற்றி என்பது புது ட்விஸ்ட்டாக இந்த தேர்தலில் அமைந்துள்ளது.. அதற்காக சென்னையில் பாஜக வளர்ந்துவிட்டது என்று சொல்லமுடியாது.. உண்மையிலேயே மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ்தான்.. நகராட்சி வார்டுகளில் பாஜக 56 இடங்களிலும், காங்கிரஸ் 146 இடங்களிலும் வென்றுள்ளது. பேரூராட்சி வார்டுகளில் மட்டும் 3 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.. ஒருவேளை பாஜகவை போல காங்கிரசும் தனித்து போட்டியிட்டிருந்தால், காங்கிரஸ் பாஜகவை விட அதிகமாக வென்றிருக்கலாம். அதேபோல, கோவை போன்ற பல மாநகராட்சிகளில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் 2-ம் இடத்திற்கு வந்துள்ளது.

சமூக ஆதரவு

ஆனால், சென்னையில் இதே காங்கிரஸை பாஜக வென்றுள்ளதற்கு காரணம் சமூக ஆதரவு முழுமையாக கிடைத்ததால்தான்.. எப்போதெல்லாம் பாஜக வென்றாலும் நாம் சற்று யோசிக்க வேண்டி உள்ளது.. இதே தொழிலாளர் நிறைந்த கோவையில் அன்றைக்கு மூத்த தலைவர் நல்லகண்ணுவை தோற்கடித்து சிபி ஆர் வெற்றி பெற்றார்.. ஆனால், அப்போதைய காலகட்டத்தைவிட இப்போது மதவாத அரசியல் தூக்கி உள்ள நிலையில், உமா ஆனந்தன் வெற்றியை சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்து போய்விட முடியாது.

சாதாரண விஷயம்தான்

மாம்பலம் பகுதியில் அவருக்கான சமுதாய வாக்குகள் கைகொடுத்திருப்பது சாதாரண விஷயம்தான்.. ஆனால் அந்த தொகுதியை திமுக காங்கிரசுக்கு ஒதுக்கியிருக்க கூடாது.. திமுகவே நேரடியாகவே போட்டியிட்டிருந்தால், நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம்.. இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுசிலா கோபாலகிருஷ்ணன் கட்சியில் சீனியர்.. இந்த தொகுதிக்கு பல வருட காலமாகவே நன்கு அறிமுகமானவர்.. இவர் எப்படி புதுமுகத்திடம் தோல்வியுற்றார் என்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது.. ஒருவேளை பாஜகவின் வெற்றிக்காக, காங்கிரஸ் தரப்பு விட்டுக் கொடுத்துவிட்டதா? என்ற சந்தேகத்தையும் இந்த வெற்றி எழுப்புகிறது.

உமா ஆனந்தன்

இதைதான் யோசிக்க வேண்டி இருக்கிறதே தவிர, பாஜக வளர்ச்சி என்ற ரீதியில் இதை அணுக கூடாது.. 2011-ல் வேறு எங்கும் போட்டியிடாமல் ஜெயலலிதா ஏன் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதையும் இந்த நேரத்தில் கணக்கில் எடுத்து பார்க்க வேண்டும்… மாம்”பலம்” தொகுதியில் உள்ளவர்களில் 60 சதவீதத்துக்கும் மேல், உமா ஆனந்தனை வெற்றி பெற வைத்துள்ளது என்பது மட்டுமே நிஜமான கள நிலவரம்.. மற்றபடி இது கட்சி நிலவரம் இல்லை.. அதேசமயம், சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயருடன் சேர்ந்து, உமா ஆனந்தன் பணியாற்ற போவதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது” என்றனர்.

English summary
Is the BJP growing in Chennai and candidate uma anandhan won in chennai 134 ward

Source: https://tamil.oneindia.com/news/chennai/is-the-bjp-growing-in-chennai-and-candidate-uma-anandhan-won-in-chennai-134-ward-449745.html