சட்டவிரோத பணப்பரிவர்த்தனை.. நிலக்கரி இறக்குமதி நிறுவனத்தின் சென்னை நிர்வாகி அகமது புஹாரி கைது – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ரூ 542 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் மோசடி செய்ததாக பிரபல நிலக்கரி நிறுவன நிர்வாகி அகமது புஹாரியை அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்டின் சென்னை நிர்வாதி அகமது புஹாரி உள்ளிட்டோர் மீது நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் பண மோசடி செய்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

குறிப்பாக 2011-2012 மற்றும் 2014-15 ஆம் ஆண்டுகளில் இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியை உயர்தரமான நிலக்கரி என ஏமாற்றி மோசடியாக அரசுக்கு விற்பனை செய்ததாக புலனாய்வு துறை விசாரணையில் கண்டறியப்பட்டது.

அதன்படி சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து அகமது புஹாரி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து ரூ 542 கோடி மோசடி செய்ததாக தெரியவந்தது.

சட்டவிரோதமாக மோசடி செய்த பணத்தை அகமது புஹாரி மொரீஷியஸ், விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களில் பணப்பரிமாற்றம் செய்து இதை மீண்டும் இந்திய நிறுவனங்களுக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து 2020 ஆம் ஆண்டு சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அகமது புஹாரியின் நிறுவனத்திற்கு சொந்தமான பணத்தை அமலாக்கத் துறை முடக்கியது. இந்த நிலையில் அகமது புஹாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

English summary
Chennai Business man held in Rs 542 crore money laundering case.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-business-man-held-in-rs-542-crore-money-laundering-case-450737.html