சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு 1,370 மேசை கணினிகள்: முதல்வர் வழங்கினார் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை பெருநகர மாநகராட்சியின் 70 பள்ளிகளுக்கு 1,370 கணினிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (30.3.2022) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 1370 புத்தாக்கம் செய்யப்பட்ட மேசை கணினிகளை சென்னை பெருநகர மாநகராட்சியின் 70 பள்ளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக, 6 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மேசை கணினிகளை வழங்கினார். 

தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும், உயர்நிலை  மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைத்துள்ளது. இதன்மூலம், ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் 10 மேசைக் கணினிகளும், ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும் 20  மேசைக் கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன. 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் தற்போது வழங்கப்பட்டுள்ள 1,370 மேசை கணினிகள் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதால், 28,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள். மேற்படி பள்ளிகளுக்கு கணினிகள் வழங்குவதன் மூலம் மாணவர்களின்  கல்வித்தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், “கற்பித்தல்-கற்றல்”  என்ற சூழலை ஏற்படுத்தி,  சுயமாகக் கற்றல் குறித்த எண்ணத்தை பேணி வளர்க்கும்.  

மாநிலத்தில் மின்னாளுமை மற்றும் டிஜிட்டல் இணைப்புகளை மேம்படுத்தும் வகையில், கடந்த சில மாதங்களில் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையால், சில கொள்கைகள் வெளியிடப்பட்டன – தரவுகளுக்கான தரநிலையை உறுதிசெய்திட, 20.01.2022 நாளிட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட Reference Standards எனும் குறிப்பு தரநிலைகள் கையேடு, 25.01.2022 நாளிட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புக் கொள்கை-2022 (Tamil Nadu Telecom Infrastructure Policy-2022), 10.03.2022 நாளிட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு தரவுக் கொள்கை-2022 (Tamil Nadu Data Policy-2022) ஆகியவை ஆகும்.  
இவை தமிழ்நாடு மாநில வலைதளத்தில்  (www.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இக்கொள்கைகள் ஒத்திசைந்த முறையில் மின்னாளுமைப் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கும், பாதுகாப்பான முறையில் தனியார் மூலம் செயலிகளை உருவாக்க அனுமதிப்பதற்கும்,  பொது நன்மைக்காக தரவுகளைப் பயன்படுத்த அனுமதிக்கவும்  மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பினை விரைந்து செயல்படுத்தவும் உதவும்.  

முதல்வரிடம் குறிப்பு தரநிலைகள் கையேடு, தமிழ்நாடு தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புக் கொள்கை-2022,  தமிழ்நாடு தரவுக் கொள்கை-2022  ஆகிய மூன்று கொள்கைகளின் பிரதிகளை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு. இ.ஆ.ப.,  தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மைச் செயலாளர் முனைவர் நீரஜ் மித்தல், இ.ஆ.ப.,  மின்னாளுமை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் தலைமைச் செயல் அலுவலர் கே.விஜயேந்திரபாண்டியன், இ.ஆ.ப.,  பெருநகர சென்னை மாநகரட்சியின் துணை ஆணையர் (கல்வி)  
டி. சினேகா, இ.ஆ.ப., மின்னாளுமை முகமையின் இணை தலைமைச் செயல் அலுவலர்  சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப.  இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை துணைத் தலைவர்சூர்யநாராயணன், மண்டல தலைவர் (கணினி) பாலாஜி புஷ்பராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/mar/30/supply-of-1370-computers-to-chennai-corporation-schools-3817550.html