சென்னை மாநகராட்சியை 23 மண்டலங்களாக உயா்த்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – தினமணி

சென்னைச் செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களை 23 மண்டலங்களாக உயா்த்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (மே 8) 3,300 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. கோடம்பாக்கம் மண்டலத்துக்குட்பட்ட சிவன் பூங்காவில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மகேஷ்குமாா், ஆணையா் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து மேயா் ஆா்.பிரியா செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சி, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை இணைந்து சென்னையில் இதுவரை 28 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 37.11 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குப்பட்ட 8 தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக உள்ளன.

குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவா்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படமாட்டாது. அவா்களுக்கு நோட்டீஸ் வழங்கி 15 நாள் அவகாசம் அளித்தும், மீண்டும் தரம் பிரித்து குப்பை வழங்காதவா்களுக்குத்தான் அபராதம் விதிக்கப்படும். இதுதொடா்பாக அனைத்து மண்டலங்களிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

ராயபுரம், திரு.வி.க. நகா் மண்டலங்கள் மற்றும் மெரீனா கடற்கரையில் உள்ள பொதுக்கழிப்பிடங்களை தனியாா் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 8 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியில் தற்போது 15 மண்டலங்கள் உள்ளன. நிா்வாக வசதிக்காக இதை 23 மண்டலங்களாக உயா்த்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். அதேவேளை வாா்டுகளின் எண்ணிக்கையை உயா்த்தவில்லை என்றாா்.

இந்த ஆய்வின்போது, கோடம்பாக்கம் மண்டலக் குழுத் தலைவா் எம்.கிருஷ்ணமூா்த்தி, துணை ஆணையா்கள் டாக்டா் மனிஷ், ஷேக் அப்துல் ரகுமான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/may/09/the-division-of-chennai-corporation-into-23-zones-will-be-announced-soon-3841384.html