210 சவரன் போலி நகைகள்… சென்னை வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி – 4 ஆண்டுக்கு பின் சிக்கிய பலே கும்பல் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: அம்பத்தூரில் 210 சவரன் போலி நகைகளை வைத்து வங்கியை ஏமாற்றி ரூ.32 லட்சம் பணம் பெற்ற 3 பேரை 4 வருடங்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னைக்கு அம்பத்தூர்- அய்யபாக்கம் நெடுஞ்சாலை, கே.கே.நகரில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அம்பத்தூர், டி.ஜி.அண்ணாநகர் பகுதியைச் சார்ந்த தமீம் அன்சாரி (33) என்பவர், தனது நண்பர்களுடன் வந்து சிறுக சிறுக சுமார் 210 சவரன் வரை தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.32 லட்சம் வரை பணம் பெற்று உள்ளார்.

இதற்கிடையில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கியில் உள்ள நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்துள்ளனர். அப்போது தமீம் அன்சாரி மற்றும் நண்பர்கள் அடமானம் வைத்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசிய போலி நகைகள் என்பதை அறிந்து வங்கி நிர்வாகிகள் அதிர்ந்துபோயுள்ளனர்.

இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி வங்கி மேலாளர் சீனிவாசன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தமீம் அன்சாரி உள்ளிட்ட 4 பேரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஆனால் அவர்கள் 4 பேரும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் போலீஸார் தலைமறைவாக இருந்த தமீம் அன்சாரி மற்றும் அவரது நண்பர்களான பாடி, கலைவாணர் நகரைச் சேர்ந்த முகம்மது கபீர் (39), முகம்மது சித்திக் (34) ஆகிய மூவரை 4 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்தனர்.

கைது செய்யபட்ட மூவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக தமீம் அன்சாரியின் மேலும் ஒரு நண்பரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

English summary
Police have arrested three persons in Chennai Ambattur after four years for defrauding a bank of Rs.32 lakh by give 1,680 gram fake gold jewelery: அம்பத்தூரில் 210 சவரன் போலி நகைகளை வைத்து வங்கியை ஏமாற்றி ரூ.32 லட்சம் பணம் பெற்ற 3 பேரை 4 வருடங்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/3-arrested-by-chennai-police-after-4-years-of-defrauding-bank-of-rs-32-lakh-by-giving-1680-gms-fake-458390.html