சென்னை போலீசாருக்கு சவால் விடும் கொள்ளையன் – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

கொள்ளையர்களை அடையாளம் கண்டு அமுக்கவே கண்காணிப்பு கேமராக்கள் எல்லா பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்களை பார்த்தே கொள்ளையர்கள் கொள்ளையடிக்க தயங்குவார்கள் என்று தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிலைமை வேறு விதமாக உள்ளது.

கண்காணிப்பு கேமரா முன்பு நின்று கொண்டே முடிந்தால் பிடியுங்கள் பார்ப்போம் என்று போலீசுக்கே சவால் விடும் அளவுக்கு கொள்ளையர்களும் வந்துவிட்டார்கள்.

உள்ளகரம், புழுதிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்புக்காக குடியிருப்பை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 3 கொள்ளையர்கள் சுற்றுச் சுவர் வழியாக ஏறி குடியிருப்புக்குள் சென்றிருக்கிறார்கள்.

சுவர் ஏறி குதித்தபோதே கண்காணிப்பு கேமராக்களையும் பார்த்து இருக்கிறார்கள். அதைப் பற்றி அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஒருவன் கேமரா லென்சு முன்பு சென்று முத்தமே கொடுத்துள்ளான். மற்றவர்களும் கேமரா முன்பு முகத்தை காட்டி முடிந்தால் பிடிங்க பார்க்கலாம் என்று சைகை காட்டி இருக்கிறார்கள்.

கேமரா பதிவுகளை அவ்வப்போது ஆய்வு செய்யும் குடியிருப்பு நலச் சங்கத்தினர் இந்த காட்சிகளை பார்த்து அதிர்ந்து போனார்கள்.

கொள்ளை எதுவும் நடை பெறவில்லை. அதற்கு முன்னோட்டம் போல் இந்த செயலில் இறங்கி காட்சிகளை சமூக வலைதளங்களில் வைரலாக்கி இருக்கிறார்கள். போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். வீடியோ பதிவுகளை கொண்டு போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

Source: https://www.maalaimalar.com/news/state/tamil-news-robber-challenges-chennai-police-as-he-stands-in-front-of-surveillance-camera-catch-him-if-possible-498079